குடுகுடுப்பைக்காரனின் வாக்கு பலித்திடுமோ என அஞ்சி, மகளை கொன்று, தாய் தற்கொலை.. கதறியழுத மகன்.!

குடுகுடுப்பைக்காரனின் வாக்கு பலித்திடுமோ என அஞ்சி, மகளை கொன்று, தாய் தற்கொலை.. கதறியழுத மகன்.!


Coimbatore Mother Killed Daughter and She Committed Suicide

வீட்டிற்கு வந்த குடுகுடுப்பைக்காரனின் வார்த்தைக்கு பயந்துபோன தாய் மகளை கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்ட பரிதாபம் நடந்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துடியலூர், அப்பநாயக்கன்பாளையம் பார்க் சிட்டி பகுதியை சார்ந்தவர் திருமூர்த்தி. இவரது மனைவி தனலட்சுமி (வயது 53). இவர்களுக்கு சசிகுமார் என்ற 34 வயது மகனும், சுகன்யா என்ற 32 வயது மகளும் உள்ளனர். கடந்த 11 வருடத்திற்கு முன்பு திருமூர்த்தி உயிரிழந்துவிட்ட நிலையில், மகன் மற்றும் மகளுடன் தனலட்சுமி தனியாக வசித்து வந்துள்ளார். 

சசிகுமார் சரவணம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வரும் நிலையில், தனலட்சுமியின் மகள் சுகன்யா மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி என்பதால், வீட்டிலேயே இருந்துள்ளார். கடந்த 4 வருடத்திற்கு முன்னதாக தனலட்சுமி தனது மகன் சசிகுமாருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். 

Coimbatore

சசிகுமாரின் திருமணத்திற்கு பின்னர் மகன், மகள், மருமகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் தனலட்சுமி மகனை தனியாக வீடு எடுத்து தங்க அறிவுறுத்திய பின்னர், சசிகுமார் தனது மனைவியுடன் சரவணம்பட்டி பகுதியில் தங்கி இருந்துள்ளார்.

இதற்குள்ளாக, சசிகுமாருக்கும் - அவரின் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 6 மாதத்திற்கு முன்னதாக தனியாக பிரிந்துள்ளனர். சசிகுமார் சரவணம்பட்டியில் உள்ள வீட்டில் இருந்தவாறு வேலைக்கு சென்று வந்த நிலையில், வார இறுதியில் தாயையும், தங்கையையும் வந்து பார்த்து சென்றுள்ளார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக தனலட்சுமி மகனுக்கு தொடர்பு கொண்டு பேசிய நிலையில், அதிகாலை நேரத்தில் குடுகுடுப்பைக்காரர் வீட்டில் நிறைய பிரச்சனை உள்ளது. சில நாட்களில் உடல்நலம் சரியில்லாமல் போகும். அனைத்தும் சரியாக பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறினார் என மகனிடம் தெரிவித்துள்ளார்.

Coimbatore

இதனைக்கேட்ட சசிகுமார், அதனை நம்ப வேண்டாம் என கூறியிருக்கிறார். இன்று காலை வேலைக்கு செல்லும் முன்னர், தாயாருக்கு மகன் தொடர்பு கொண்ட நிலையில், போனை எடுக்காததால் அக்கம் பக்கத்தினருக்கு போன் செய்து வீட்டில் சென்று பார்க்க சொல்லியுள்ளார். அப்போது, அவர்கள் சென்று பார்க்கையில் தனலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.

அவரது மகள் சுகன்யாவோ வாயில் நுரைதள்ளியவாறு கிடந்துள்ளார். இதுகுறித்து சசிகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் வந்து தாய், தங்கையின் உடலை பார்த்து கதறி அழுதார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த துடியலூர் காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணை நடந்து வருகிறது.