காதல் திருமணம் செய்த 90 நாட்களில், 18 வயது இளம் மனைவி கழுத்தில் சதக்.. அருவியில் நடந்த பகீர் கொலை..!



Chennai Red Hills Love Married Girl Killed by Husband

18 வயதாகும் காதல் மனைவியை ஆசையாக அருவிக்கு அழைத்துச் சென்று கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் சென்னையில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னைக்கு மிகவும் அருகில் உள்ள திருப்பதி செல்லும் சாலையில், ஆந்திரபிரதேசம் மாநிலத்தின் கைலாச கோனா அருவி உள்ளது. தமிழகத்தின் குற்றாலம் போல கைலாச கோனாவில் 7 அருவிகள் காணப்படும். இதில், 3 அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. தமிழகத்தைச் சார்ந்த சுற்றுலா பயணிகள் பலரும் வார விடுமுறை நாட்களில் இங்கு அதிகமாக செல்வது வழக்கம். பிற நாட்களில் ஒரு சிலர் மட்டுமே வந்து செல்வார்கள். மேலும், அங்கு காவல்துறை பாதுகாப்பு என்பது கிடையாது என்பதால் மது பிரியர்கள் மற்றும் தனிமை காதலர்களுக்கு வசதியான இடமாக அமைகிறது. 

சென்னையில் உள்ள செங்குன்றத்தை சார்ந்தவர் மாணிக்கம். இவரின் மகள் தமிழ்ச்செல்வி (வயது 18). கல்லூரிக்கு செல்லவிருந்த தமிழ்செல்வியை, மதன் என்ற மெக்கானிக் காதல் வலையில் வீழ்த்தி கோவிலில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்துகொண்டான். காதல் ஜோடி 3 மாதங்கள் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்தி வந்த நிலையில், கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி தமிழ்செல்வி மாயமாகவே, தனது மனைவி வேறொருவருடன் சென்று விட்டதாக கூறி மதன் கஞ்சா மற்றும் மது குடித்து வந்ததாக தெரிய வருகிறது. 

இதற்குள்ளாக, தமிழ்செல்வியின் பெற்றோர் தனது மகளை காணவில்லை என செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரின் பேரில் உரிய விசாரணையை ஏதும் நடைபெறாததால் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மதன் மற்றும் அவரின் மனைவி கைலாச கோனா அருவிக்கு சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. 

chennai

செங்குன்றம் காவல் துறையினர் தமிழ்ச்செல்வி புகைப்படத்துடன் ஆந்திர பிரதேசம் மாநிலத்திற்கு சென்று விசாரணை நடத்தி சி.சி.டி.வி காட்சிகளை பார்த்தபோது, தமிழ்செல்வியை தன்னுடன் அழைத்துச் சென்ற மதன் மீண்டும் வரும்போது தனியாக வந்தது உறுதியானது. போதையில் மிதந்த மதனை பிடித்து விசாரணை செய்த போது, மதன் என்ற மதம்பிடித்த கயவனுக்குள் இருந்த பகீர் சம்பவம் தெரியவந்தது. விசாரணையில், திருமணமான சில நாட்களிலேயே நண்பர்களுடன் காதல் மனைவி பேசுவதை மதன் சந்தேகித்து இருக்கிறான். 

மேலும், கஞ்சா, மது பழக்கத்திற்கு ஏற்கனவே அடிமையாக இருந்த மதன், காதலிக்கும் போது தமிழ்செல்வியிடம் நடித்து அவரை காதல் வலையில் வீழ்த்தியுள்ளான். திருமணம் முடிந்ததும் தனது சுயரூபத்தை காண்பித்த மதன், போதையில் தனது மனைவியை அடித்து உதைத்துள்ளான். இந்த நிலையில், கைலாச கோனா அருவிக்கு மனைவியை ஆசையாக அழைத்து செல்வது போல நடித்த கொடூரன், அருவியில் மனைவியுடன் குளிக்கும்போதே தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியின் கழுத்தில் குத்தி கொலை செய்து உயிரிழந்ததும் கீழே தள்ளிவிட்டு வந்துள்ளான். 

விசாரணைக்கு பின்னர் மதனை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைந்துள்ள நிலையில், தமிழ்ச்செல்வியின் சடலத்தை தேடி வருகின்றனர். பருவ வயதில் ஏற்படும் காதலால், காதலனின் சுயரூபம் தெரியாமல் திருமணம் என்ற போர்வையில் சிக்கினால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவம் ஓர் சாட்சியாகும்.