காது குத்துக்கு முன்பே கலவரம்; மொய் பிரச்சனையில் இளைஞர் மூவர் கும்பலால் அடித்தே கொலை.!

காது குத்துக்கு முன்பே கலவரம்; மொய் பிரச்சனையில் இளைஞர் மூவர் கும்பலால் அடித்தே கொலை.!


Chennai Mamallapuram Man Killed by Relations 

 

சென்னையில் உள்ள குன்றத்தூர், கொல்லஞ்சேரி பகுதியில் வசித்து வருபவர் ராமச்சந்திரன். இவர் ஊரூராகச்சென்று குடை பழுது நீக்கம் செய்து தரும் வேலையை செய்து வருகிறார். மாமல்லபுரம் பட்டிபுலம் கிழக்கு கடற்கரை சாலையோரம், கடந்த சில மாதமாக கொட்டகை அமைத்து குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். 

இவரின் மகனுக்கு இன்று குலதெய்வ கோவிலில் வைத்து காதுகுத்து நிகழ்ச்சி நடைபெறவிருந்துள்ளது. அதில் கலந்துகொள்ள நேற்று இரவில் உறவினர்களை வீட்டிற்கு அழைத்துக்கொண்டு இருந்துள்ளார். 

இதனையடுத்து, இவரின் உறவினரான செங்கல்பட்டு, கோழிப்பண்ணை பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி (வயது 28), பட்டினப்பாக்கம் பகுதியை சேர்ந்த பாண்டியன், விக்னேஷ் என 3 பேரும் இரவு வீட்டிற்கு வந்துள்ளனர். 

இவர்களுக்கு ராமச்சந்திரன் மதுபான விருந்து வைத்த நிலையில், மதுபோதையில் மொய் செய்வது தொடர்பாக சின்னத்தம்பி - பிறர் இடையே தகராறு ஏற்பட்டு மோதல் சம்பவம் நடந்துள்ளது. 

இந்த சம்பவத்தில் ராமச்சந்திரன், பாண்டியன், விக்னேஷ் ஆகியோர் சேர்ந்து சின்னத்தம்பியை சரமாரியாக தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக்கண்டு அதிர்ந்துபோன மூவரும் அங்கிருந்து தப்பி சென்றனர். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த மாமல்லபுரம் காவல் துறையினர், சின்னத்தம்பியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தலைமறைவான கொலையாளிகள் மூவரையும் கைது செய்தனர்.