இன்று 10 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!



Chennai IMD Update 9 Sep 2021

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "வட தமிழக பகுதிகளை ஒட்டி நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 9 ஆம் தேதியான இன்று, தமிழ்நாடு - புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

chennai

10-ம் தேதி மற்றும் 11, 12-ம் தேதியை பொறுத்தவரையில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியஸும் பதிவாகலாம். 

chennai

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை லட்சத்தீவு பகுதிகள், கேரளா கடலோர பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல், தெற்கு வங்கக்கடல், தமிழக கடலோர பகுதி, மன்னார் வளைகுடா, குமரிக்கடல், கர்நாடக கடலோரப் பகுதி, அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல், ஆந்திர கடலோர பகுதி, மத்திய வங்ககடல் பகுதிகளில் பலத்த சூறாவளிக்காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வேகமாக வீசப்படும் என்பதால், இப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்" என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.