அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு அடிக்கல்; இந்த திட்டத்தால் என்ன பயன் தெரியுமா?

அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி, கொங்கு மண்டல மக்களின் 60 ஆண்டு கால கனவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நனவாக்கி இருப்பது பாராட்டத்தக்கது. தமிழக முதல்-அமைச்சராக பெருந்தலைவர் காமராஜர் இருந்தபோதே அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
அதன்பிறகு, கடந்த 60 ஆண்டுகளில் அத்திட்டம் தொடர்பாக பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காரணங்களால் அவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் இந்த திட்டத்தை நிறைவேற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாக்குறுதி அளித்து அதன் பணிக்கான அடிக்கல் நாட்டியுள்ளார்.
அத்திக்கடவு-அவினாசி திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலம் கடலில் வீணாக கலக்கும் உபரி நீர் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 31 ஏரிகள், 40 ஊராட்சி ஒன்றியக் குளங்கள் மற்றும் 538 நீர் நிலைகளில் நிரப்பப்படும். இதன்மூலம் அப்பகுதிகளில் வாழும் 35 லட்சம் மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுவதுடன், 1.30 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.
இத்தகைய வளமையான திட்டத்தை செயல்படுத்தும் தமிழக அரசுக்கும், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் உழவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.