250 பேரின் உயிரை காவுவாங்கிய அரியலூர் இரயில் விபத்து: காட்டாற்று  வெள்ளத்தால் நடந்த சோகம்.! மருதையாற்றின் மறுபக்கம்.!

250 பேரின் உயிரை காவுவாங்கிய அரியலூர் இரயில் விபத்து: காட்டாற்று  வெள்ளத்தால் நடந்த சோகம்.! மருதையாற்றின் மறுபக்கம்.!



Ariyalur District 1956 Train Crash Due to Marudaiyaru Basin Floods 

 

கடந்த 1956ம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் தேதி பெய்த கனமழை காரணமாக, அன்று அம்மாவட்டமே ஸ்தம்பித்தது. அன்றைய நாளின் இரவில் 09:30 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து தூத்துக்குடிக்கு விரைவு இரயில் (வ.எண் 603) 800 பயணிகளுடன் தனது பயணத்தை தொடங்கியது. நீராவி எஞ்சின் பெட்டியுடன், கொட்டும் மழையிலும் விரைவு இரயில் தனது பயணத்தை தொடங்கியது. 

இந்த இரயிலுக்கு முன்னதாக திருவனந்தபுரம் மற்றும் திருநெல்வேலி செல்லும் விரைவு இரயில்கள் பயணத்தை தொடங்கி இருந்தன. 13 பெட்டிகள் கொண்ட விரைவு இரயில், விருத்தாச்சலம் இரயில் நிலையத்தை நெருங்கியபோதும் மழை தொடர்ந்தது. 

விருத்தாசலத்தில் இரயிலின் இறுதிப்பெட்டி சேலம் செல்லும் இணைப்பு இரயிலில் இணைக்க தனியாக நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் 12 பெட்டியோடு திருச்சி நோக்கி முதற்கட்டமாக பயணத்தை தொடங்கிய இரயில், அரியலூரில் இருந்து 35 மைல் தொலைவில், கல்லகம் இரயில் நிலையத்தின் காவேரி கிளை ஆறு அருகே சென்றது. இந்த கிளையாருக்கு மருதையாறு என்று பெயர்.

இடைவிடாத மழையால் காவேரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய நிலையில், மருதையாற்றிலும் வெள்ளம் ஓடியது. இன்றைய நாளின் (நவம்பர் 23, 1956) காலை 05:30 மணியளவில் அரியலூரில் இருந்து திருச்சி நோக்கி இரயில் பயணித்தபோது, மருதையாற்றின் இரயில்வே பாலத்தினை மூழ்கடித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடியிருக்கிறது.

போதிய வெளிச்சமின்மை காரணமாக இரயில் ஓட்டுநர் துரைசாமி, பயர்மேன் முனுசாமி, கோதண்டத்தின் கண்களுக்கு ஆற்றின் வெள்ளம் தெரியாததால், பாலத்தின் தூண்களும் ஆட்டம்காண, இறுதியாக பாலம் இடிந்து இரயில் பெட்டிகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

 

இரயில் பயணிகள் என்ன நடக்கிறது?? என்பது கூட தெரியாமல் அபயகுரலோடு நீரில் இழுத்துச்செல்லப்பட்டனர். முதல் 7 பெட்டிகள் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டு, எஞ்சினுக்கு அடுத்தபடியான பெண்கள் பெட்டியில் பயணித்த குழந்தைகளும், பெண்களும் நீரோடு அடித்து செல்லப்பட்டனர்.

கோர சம்பவத்தில் நீரில் மூழ்கிய 250 பேர் பரிதாபமாக பலியாகினர். விடிந்த பின்னர் மக்களுக்கு விபரம் தெரியவந்து, எங்கும் மருதையாற்றின் ஓரம் மரண ஓலமானது. 2 நாட்கள் தீவிர தேடலுக்கு பின்னரே மீட்பு படையினர் 150 உடல்களை மீட்டனர். பலரின் உடல் அடையாளம் தெரியாமல் சிதைந்துபோனது, அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.

அடையாளம் காண இயலாத வகையில் மீட்கப்பட்ட 60 பேரின் உடல்கள் ஒரே குழியில் புதைக்கப்பட்டது. நேரு பிரதமராக இருந்தபோது, இரயில்வே துறை அமைச்சராக லால் பகதூர் சாஸ்திரி பணியாற்றி வந்தார். இந்த விபத்துக்கு தானே முழு பொறுப்பேற்பதாக அறிவித்த லால் பகதூர், தனது பதவியையும் இராஜினாமா செய்தார். 

இரயிலின் கடைசி பெட்டியில் பயணம் செய்த கார்ட் வைத்யனாதஸ்வாமி, ஆறுமுகம், 8வது பெட்டியில் இருந்து 12 பெட்டி வரை இருந்த பயணிகள் உயிர்தப்பினர். ஆற்றின் வெள்ளம் தணிவதற்கு 4 மணிநேரம் ஆகியது. 

விபத்தில் உயிர்தப்பியவர்கள் சாலை மார்க்கமாக ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மருதையாற்றில் கண்ணீருடன் விழிபிதுங்கி நின்றனர். இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த அன்றைய ஆளுநர் ஸ்ரீபிராகசா கண்ணீருடன் தனது வேதனையை வெளிப்படுத்தினார். 

அன்று மத்திய இரயில்வே துணை மந்திரியாக பணியாற்றி வந்த தமிழ்நாட்டை சேர்ந்த ஓ.வி அழகேசன் அரியலூர் வந்து நேரில் கண்ணீர் விட்டு, சோர்ந்துபோய் உட்கார்ந்தார். சடலங்கள் மீட்கப்படுவதை நேரில் கண்டு துடிதுடித்துப்போனார். பெண்கள் பெட்டி சகதியில் மண்ணோடு மண்ணாக புதைந்துவிட, சடலங்கள் அழுகி துர்நாற்றம் வீசின. இதனால் ஆற்றில் தண்ணீர் வற்றியதும், சடலங்களை மீட்க இயலாமல் உடல்களுடன் இரயில் தீவைத்து கொளுத்தப்பட்டது. 

இந்த விபத்து நடந்து 67 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த விபத்தில் உய்ரிதப்பியவர்கள் தங்களின் இறுதிக்கட்ட வாழ்நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கும் வயதில் இருக்கின்றனர். அந்த சோக வடு அவர்களின் மனதில் இருந்து மறைந்துகூட போயிருக்கலாம்.