சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அனுமதி! படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்! முதல்வர் உத்தரவு!allow tv film shooting

உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் நான்காவது கட்டமாக ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.  இதனால் அமைப்புசாரா தொழிலாளர்கள் உட்படப் பலர் பாதிக்கப்பட்டனர். அதில் திரைத்துறை சார்ந்த தொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் சின்னத்திரை படப்பிடிப்பை மீண்டும் துவங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

இதனையடுத்து, சின்னத்திரை தொடர்பான படப்பிடிப்புகளை 20 நபர்களை மட்டும் வைத்து நடத்தாலாம் என அமைச்சர் கடம்பூர் ராஜு அண்மையில் தெரிவித்தார்.ஆனால் இதற்கு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் 20 நபர்களை மட்டும் வைத்துக்கொண்டு படப்பிடிப்புகளை நடத்துவது என்பது சாத்தியமில்லாதது எனத் தெரிவித்தனர்.

serial

இதனையடுத்து, தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று அதிகபட்சமாக 60 நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை 31.05.2020 முதல் நடத்த அனுமதித்து உத்தரவிட்டுள்ளார் தமிழக முதல்வர்.

சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடமும், பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவரிடமும் அனுமதி பெறுதல் வேண்டும். மேலும், சின்னத்திரை படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அனைவரும் மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.