தமிழகம்

இன்று ஆடிப்பெருக்கு வெறிச்சோடிய நதிக்கரைகள்! பொது முடக்கத்தையும் மீறி மயிலாடுதுறையில் மக்கள் கொண்டாட்டம்!

Summary:

aadiperukku festival

ஆடி மாதம் 18-ந் தேதியில் வரும் பதினெட்டாம் பெருக்கு விழா, நதிக்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் கொண்டாடப்படுகிறது. தமிழகம் முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படவுள்ள நிலையில்,கொரோனா தடுப்பு பணி காரணமாக நீர்நிலைகளில் வழிபாடு நடத்த தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பரவுதலை தடுக்க பல கட்டங்களாக ஊரடங்கு சில தளர்வு அளிக்கப்பட்டு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் மளிகை மற்றும் காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் 8 மணி வரை திறந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது. தியேட்டர்கள், மால்கள் மற்றும் பூங்காக்கள் திறக்க இன்னும் அனுமதிக்கப்பட வில்லை. அதே போல் நகரில் உள்ள வழிபாட்டுத்தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.

ஆனால் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை கடைபிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று முழு ஊரடங்கு ஆகும். இந்தநிலையில் ஆடி பெருக்கான இன்று பெரும்பாலானோர் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துவார்கள். ஆனால் முழு ஊரடங்கு காரணமாக கோவில்களும் திறக்கப்படவில்லை.  மேலும் இந்த முழு ஊரடங்கின் போது பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய ஆடி பெருக்கு நாளில் ஆறுகளில் நீராடிவிட்டு மேற்கொள்ளும் தாலி கயிறு மாற்றுதல், முளைப்பாரி விடுதல் உள்ளிட்டவை நடைபெறவில்லை. பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே வழிபாடுகளை நடத்தினர். பொது முடக்கத்தையும் மீறி மயிலாடுதுறையில் காவிரி துலாக்கட்டத்தில் கூடிய ஏராளமான பொது மக்கள் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடி வருகின்றனர்.


Advertisement