2004 சுனாமியில் பெற்றோரை இழந்த குழந்தைகள்.. தத்தெடுத்து, தந்தையாக இராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., நெகிழ்ச்சி செயல்.!

இந்தோனேஷியா, இலங்கை மற்றும் இந்தியாவை கடந்த 2004 ஆம் வருடம் சுனாமி தாக்கியது. இந்த சுனாமியால் சென்னை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, காரைக்கால், கடலூர் பகுதிகள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. பலரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சுனாமியில் 9 மாத குழந்தை சௌமியா, 3 மாத குழந்தை மீனா ஆகியோர் தங்களின் பெற்றோரை இழந்தனர்.
குழந்தைகளின் பெற்றோர்களை கண்டுபிடிக்க இயலாத நிலையில், அன்றைய நாளில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த, தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், 2 குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்த்து வந்தார். பணி மாற்றம் பெற்று சென்னைக்கு வந்தாலும், அவ்வப்போது தனது பிள்ளைகள் 2 பேரையும் நாகைக்கு சென்று சந்தித்து வந்தார்.
அறியா வயதில் பெற்றோரை இழந்து, கடவுளின் அருளினால் இராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்களை தந்தையாக பெற்ற குழந்தைகள் இருவரும் அவரை தந்தை என்றே அழைத்து வருகின்றனர். தற்போது, 18 வயதாகும் இரண்டு குழந்தைகளையும் நாகப்பட்டினம் புதிய கடற்கரை சாலை பகுதியில் வசித்து வரும் மணிவண்ணன் - மலர்விழி தம்பதிகள் தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், சௌமியாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று, வரணும் நிச்சயம் செய்யப்பட்டது. இவர்களின் திருமணம் நேற்று நாகப்பட்டினத்தில் வைத்து நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் இராதாகிருஷ்ணன் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.