தமிழகம்

சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.1.50 லட்சம்!. இந்த காலத்தில் இப்படி ஒரு நேர்மையின் சிகரம்! குவிந்துவரும் பாராட்டுக்கள்!

Summary:

திருப்பூர் மாவட்டத்தில் சாலையில் கிடந்த, ஒரு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கண்டெடுத்த தொழிலாளி ஒருவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் செல்வம். 50 வயதான இவர் அப்பகுதியில் பனியன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று காலை அவரது நண்பர் ராஜமாணிக்கம் என்பவருடன், சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது, சாலையில் சிறிய கைபை ஒன்று கேட்பாரற்று கிடப்பதை பார்த்து அதனை எடுத்துள்ளார், அந்த கைப்பையை திறந்து பார்த்தபோது அதில், ஒரு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் பணம் இருந்துள்ளது. 

மனிதநேயம் கொண்ட செல்வம் ஐயோ.. பாவம் யாரோ பணத்தை தவறவிட்டார்களே!. என எண்ணி உடனடியாக அந்த பணத்தை திருப்பூர் வடக்கு காவல்நிலையத்துக்கு கொண்டு சென்று இன்ஸ்பெக்டரிடம் கொடுத்துள்ளார். தொழிலாளியின் நேர்மை செயலை, காவல்நிலையத்தில் உள்ள அணைத்து அதிகாரிகளும் பாராட்டியுள்ளனர்.

இந்தநிலையில் பணத்தை தவற விட்டு சென்ற உரிமையாளர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது, ரூ.1.50 லட்சம் ரூபாய் தவறியதாக கருவம்பாளையத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் காவல்நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது போலீசார் அவரிடம் விசாரித்த போது கண்டெடுக்கப்பட்ட பணம் விஜயகுமாருடையது என்பது தெரியவந்தது. 

இதனையடுத்து அந்த பணத்தை உரியவரிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர். தற்போதைய காலத்தில் அடுத்தவர்கள் பணம் என்று தெரிந்தே எடுத்துச்செல்பவர்கள் மத்தியில் சாலையில் கெடப்பாரற்று கிடந்த 1.50 லட்சம் ரூபாயை போலீசாரிடம் ஒப்படைத்த செல்வத்தின் நேர்மையை பாராட்டி, சால்வை அணிவித்து போலீசார் கவுரவித்தனர்.


Advertisement