இந்தியா - பாகிஸ்தான் கைகுலுக்கல் விவகாரத்தின் பின்னணி இதுதானா? கபில் தேவ் கொடுத்த அதிரடி பதில்!
இந்தியா–பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் மைதானத்தில் நடைபெறும் விளையாட்டைத் தாண்டி, இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளின் தாக்கத்தையும் எதிரொலிக்கச் செய்யும் ஒன்றாக இருந்து வருகின்றன. குறிப்பாக கடந்த ஆசியக் கோப்பை தொடர் முதல் இரு அணி வீரர்கள் கைகுலுக்காத விவகாரம் தொடர்ந்து பேசுபொருளாகி வருகிறது. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், வீரர்களின் நிலைப்பாடு குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இந்தியா–பாகிஸ்தான் வீரர்கள் கைகுலுக்க வேண்டாம் என்று அரசு முடிவு செய்திருந்தால், வீரர்களுக்கு தனிப்பட்ட முறையில் வேறு வழியில்லை என்று கபில் தேவ் கூறியுள்ளார். இதுபோன்ற விவகாரங்களில் வீரர்கள் அரசின் முடிவை பின்பற்ற வேண்டிய சூழல் இருப்பதாகவும், அரசு என்ன கூறுகிறதோ அதன்படியே வீரர்கள் செயல்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் கேப்டனுமான இம்ரான் கான் குறித்தும் கபில் தேவ் பேசியுள்ளார். இம்ரான் கானுக்கு மனிதநேயமான அணுகுமுறையும், உரிய மருத்துவ சிகிச்சையும் வழங்கப்பட வேண்டும் என்பதே தனது கோரிக்கை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இம்ரான் கானின் சட்ட விவகாரங்களில் தலையிடுவது நோக்கம் அல்ல என்றும், அவரது அடிப்படை நலன் மற்றும் மருத்துவ வசதிகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதுதான் கோரிக்கை என்றும் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஸ்மிருதி மந்தனா வரலாற்று சாதனை.. ஒரே போட்டியில் 2 உலக சாதனைகள்!
இந்த விவகாரத்தில் கபில் தேவ் மட்டும் அல்லாமல், சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் சர்வதேச கேப்டன்களும் குரல் கொடுத்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 21 முன்னாள் சர்வதேச கேப்டன்கள் இணைந்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு கடிதம் எழுதி, இம்ரான் கானுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும், நீதிமன்றம் உத்தரவிட்ட மருத்துவ மதிப்பீடு முறையாக நடைபெற வேண்டும், குடும்பத்தினரை சந்திக்கும் வாய்ப்பு தடையின்றி வழங்கப்பட வேண்டும் எனக் கோரினர்.
இதற்கு முன்னதாகவும் இதே குழுவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் கேப்டன்கள் இம்ரான் கானின் உடல்நலம் மற்றும் சிறைச்சாலை நிலை தொடர்பாக கவலை தெரிவித்து கடிதம் எழுதியிருந்தனர். இந்நிலையில், இந்தியா–பாகிஸ்தான் கிரிக்கெட்டில் தொடரும் கைகுலுக்கல் சர்ச்சை ஒருபுறம் இருக்க, இம்ரான் கானுக்கு மனிதநேயமான சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டையும் கபில் தேவ் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: அப்பா The Wall.. மகன் சரவெடி! 211 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆஸ்திரேலியாவை அலறவிட்ட ட்ராவிட் மகன்!