வழக்கமான அதிரடியை காட்டிய சேவாக்.. இந்திய லெஜென்ட்ஸ் அணி அபார வெற்றி!

RSW என அழைக்கப்படும் உலக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான தொடரின் முதல் ஆட்டத்தில் சச்சின் தலைமையிலான இந்தியா லெஜென்ட்ஸ் அணி லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் லெஜென்ட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சச்சின் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தனர். சந்தர்பால் அதிகபட்சமாக 61 ரன்கள் விளாசினார்.
அடுத்து களமிறங்கிய இந்திய லெஜென்ட்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சச்சின் மற்றும் சேவாக் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணி 10 ஓவரில் 80 ரன்களை கடந்தது.
சச்சின் 29 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கைப் 14, கோனி 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் யுவராஜ் சேவாக்குடன் ஜோடி சேர்ந்தார்.
கடந்த காலத்தை போலவே அதிரடி காட்டிய சேவாக் அரைசதத்தை கடந்தார். இந்திய அணி 18.2 ஓவர்களில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சேவாக் 57 பந்துகளில் 74 ரன்களும் யுவராஜ் 10 ரன்களும் எடுத்தனர். சேவாக் ஆட்ட நாயகன் விருதினை பெற்றார்.