
even rain stops difficult to continue the match
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் 18 ஆவது ஆட்டத்தில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுவதாக இருந்தது. ஆனால் ஆட்டம் நடைபெறும் நாட்டிங்காம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆட்டம் தற்காலிகமாக தடைபட்டுள்ளது.
இதுவரை 3 போட்டிகளில் ஆடியுள்ள நியூசிலாந்து அணியும் 2 போட்டிகளில் ஆடியுள்ள இந்திய அணியும் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த போட்டியில் யாருக்கு வெற்றி தொடரும் யாருக்கு தோல்வி கிடைக்கப்போகிறது என ரசிகர்கள் அனைவரும் உற்சாகமாக காத்திருக்கின்றனர்.
ஆனால் மைதானத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் ஆட்டம் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு ஆட்டம் துவங்குவது தான் வழக்கமான நேரம். ஆனால் நோட்டிங்காமில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. மேலும் இன்றும் மழை பெய்யும் என்று ஏற்கனவே கணிக்கப்பட்டது.
அதன்படி இன்று எதிர்பார்த்தவாறே காலை முதல் மழை பெய்து வருகிறது. இருப்பினும் அவ்வப்போது மழை விட்டு விட்டு பெய்வதால் ஆட்டம் நடைபெற வாய்ப்பு கிடைக்குமா என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்திய நேரப்படி மாலை 4:30 மணியளவில் மழை முற்றிலும் நின்றது. பிட்சில் மூடியிருந்த தார்பாய்கள் அனைத்தும் நீக்கப்பட்டன. நடுவர்கள் மைதானத்திற்குள் வந்து ஆய்வு மேற்கொண்டனர். பிட்சில் ஈரப்பதம் இல்லை என்ற நடுவர்கள், ஆடுகளத்தில் எல்லைக்கோடு பகுதிகளில் அதிகமான ஈரப்பதம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் அந்த ஆய்வு முடிந்த சிறிது நேரத்திலே மீண்டும் தூறல் விழ ஆரம்பித்துள்ளது. ஆய்வு முடித்து பேசியுள்ள நடுவர்கள், மழை முற்றிலும் நின்றாலும் எல்லைக்கோடு பகுதிகளில் அதிகம் ஈரப்பதம் இருப்பதால் வீரர்களை ஆட வைப்பது சற்று சிரமம் தான். ஏனெனில் இதனால் வீரர்களுக்கு காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வெயில் அதிகமாக வந்து மைதானத்தில் ஈரப்பதம் குறைந்தால் மட்டுமே ஆட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர். மீண்டும் அடுத்த ஆய்வு இந்திய நேரப்படி 6:30 மணிக்கு தெரியவரும்.
Advertisement
Advertisement