மகளிருக்கு மாதம் ரூ.2,500.. 2 கிராம் தங்க மோதிரம்..விஜய் CM ஆனதும்.. லிஸ்ட் போடப்பட்ட திட்டங்கள்.?!
த.வெ.க தலைமையிலான கட்சி ஆட்சியை பிடித்து விஜய் முதலமைச்சர் ஆனதும் அவர் தனது தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த முக்கிய திட்டங்கள் குறித்து பார்க்கலாம். குறிப்பாக அவற்றில் பெண்கள், மாணவர்கள், விவசாயிகள் மற்றும் வேலைவாய்ப்பு தேடுபவர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினரையும் நேரடியாக சென்றடையும் வகையில் இந்த வாக்குறுதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றால் மிகையாகாது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் எனவும், அனைத்து பெண்களுக்கும் பேருந்துகளில் இலவசப் பயணம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு உருளைகள் வழங்கப்படும் திட்டமும் இதில் இடம்பெற்றுள்ளது. பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, ரூ.5,00,000 வரை வட்டி இல்லாத கடன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி மற்றும் சமூக நலனை முன்னிறுத்தும் வகையில், மாணவர்களுக்கு ரூ.15,000 உதவித் தொகை வழங்கப்படும் எனவும், முதியோருக்கான ஓய்வூதியம் ரூ.3,000 ஆக உயர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன், 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமண உதவித் திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்கப்படும் எனவும், குழந்தை பிறப்பிற்கு 2 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இது பெண்கள் மற்றும் குடும்ப நலனை முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு துறையிலும் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு மாதம் ரூ.4,000 வழங்கப்படும் எனவும், 5,00,000 பேருக்கு மாதம் ரூ.18,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5,00,000 பேருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கான நிவாரணமாக, 5 ஏக்கர் வரை உள்ள நிலங்களுக்கு முழுமையான விவசாயக் கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்றும், அதற்கு மேற்பட்ட நிலங்களுக்கு 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என்றும் இந்த தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்புகள் அனைத்தும் வாக்காளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.