BREAKING : மனிதாபிமான அடிப்படையில் அனைத்து வழக்குகளும் ரத்து...! சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!!!



tamil-nadu-assembly-farmers-teachers-cases-drinking-wat

தமிழக சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், மக்கள் நலன் சார்ந்த பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். விவசாயிகள், ஆசிரியர்கள் மற்றும் பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்வதாக அறிவித்தார். இதனுடன், குடிநீர் உள்கட்டமைப்பை மேம்படுத்த பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களையும் அவர் அறிவித்தார்.

விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து

2021 முதல் 2026 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார். அதேபோல், பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளும் முழுமையாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சட்டசபையில் வெடித்த சினிமா பாணி அரசியல்! உதயநிதி ஸ்டாலின் பேச்சிக்கு மரண மாஸ் பதிலடி கொடுத்த அமைச்சர் வன்னி அரசு! அனல் பறந்த விவாதம்..!!!

அமைதியான முறையில் போராடியவர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், மனிதாபிமான அடிப்படையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் கூறினார்.

மீஞ்சூரில் ரூ.4,800 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்

வடசென்னை, ஆவடி, பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மீஞ்சூரில் புதிய கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் அமைக்கப்பட உள்ளது. நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் இந்த திட்டத்துக்கு ரூ.4,800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆவடி மாநகராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை அதிகரிக்க மேலும் ரூ.410 கோடி செலவிடப்பட உள்ளது.

மாநகராட்சிகள், நகராட்சிகளில் குடிநீர் வசதி மேம்பாடு

மதுரை மற்றும் கடலூர் மாநகராட்சிகள், 9 நகராட்சிகள், 20 பேரூராட்சிகளில் குடிநீர் வசதியை மேம்படுத்த ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பழமையான 33 கூட்டுக் குடிநீர் திட்டங்களை சீரமைக்க முதற்கட்டமாக ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார். பணிகளை விரைவுபடுத்தி, பொதுமக்களின் குடிநீர் தேவையை தொடர்ந்து பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

 

இதையும் படிங்க: அவுங்களுக்கு மட்டும் தானா... எங்களுக்கும் கொடுத்தா நல்லா இருக்கும்! பாமக எம்எல்ஏ கணேஷ் பேச்சால் சிரிப்பில் மூழ்கிய சட்டப்பேரவை...! CM ரியாக்ஷன் தான் ஹைலைட்.. வைரல் வீடியோ!!!