31 ஆண்டுகளாக சிறையில் வாடும் ராபர்ட் பயஸ் சிறை விடுப்பு கேட்டும் இழுத்தடிப்பதா?: சீமான் கொந்தளிப்பு..!

31 ஆண்டுகளாக சிறையில் வாடும் ராபர்ட் பயஸ் சிறை விடுப்பு கேட்டும் இழுத்தடிப்பதா?: சீமான் கொந்தளிப்பு..!



Robert Payas should be released from prison on account of his health

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு, 31 ஆண்டுகளாக சிறைக்கொட்டடியில் வாடும் தம்பி ராபர்ட் பயசின் உடல்நலனைக் கருத்தில்கொண்டு அவருக்குச் சிறைவிடுப்பு வழங்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:-

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு, 31 ஆண்டுகளாக கொடுஞ்சிறைவாசம் அனுபவித்துக்கொண்டிருக்கும் தம்பி ராபர்ட் பயஸ் அவர்கள் சிறைவிடுப்புகோரி விண்ணப்பித்து நான்கு மாதங்களைக் கடந்தும், அதற்கு ஒப்புதல் தராது இழுத்தடித்து வரும் தமிழக அரசின் போக்கு பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது. தம்பி பேரறிவாளன் தவிர்த்து, எஞ்சியிருக்கும் ஆறு தமிழர்களின் விடுதலைக்கான முன்னெடுப்புகளைச் செய்வோமென வாக்குறுதி அளித்திருந்த திமுக அரசு, அதற்கு முற்றிலும் நேர்மாறாக, மாநில அதிகார வரம்புக்குட்பட்டு சிறைவிடுப்பு வழங்கவே கெடுபிடிகள் விதிப்பதும், காலந்தாழ்த்துவதும் கடும் கண்டனத்திற்குரியது.

இந்திய அமைதிப்படையால் தனது குழந்தையை இழந்து, கர்ப்பிணி மனைவியோடு தாய்த்தமிழகத்தை நாடி வந்த ஈழத்தமிழரான தம்பி ராபர்ட் பயஸ் அவர்கள் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிணைக்கப்பட்டு, 31 ஆண்டுகளாகச் சிறைக்கொட்டடியில் வாடி வருவது எதன்பொருட்டும் ஏற்கவியலா பெருங்கொடுமையாகும். தன்னைப் பெற்று வளர்த்த தாயைப் பிரிந்து, உற்ற துணையான மனைவியைப் பிரிந்து, பெற்றெடுத்த மகனைப் பிரிந்து, சிறைக்கம்பிகளுக்கு நடுவிலேயே தனது இளமைக்காலம் முழுவதையும் தொலைத்து நிற்கிற தம்பி பயஸ், மத்தியப் புலனாய்வுத்துறையால் விசாரணைக்காலத்தில் செய்யப்பட்ட சித்திரவதைகளாலும், கொடுந்தாக்குதல்களாலும் இன்றளவும் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கும், அவரது மனைவிக்குமான உடல்நலக் குறைபாடுகளுக்கான மருத்துவச்சிகிச்சைகளுக்காகவே சிறைவிடுப்பு கோரியிருக்கிறார் தம்பி பயஸ்.

31 ஆண்டுகால நீண்ட நெடிய சிறைவாழ்க்கையில் அவரது மனைவி பிரேமாவை இரண்டே இரண்டு முறை மட்டும்தான் சந்தித்திருக்கிறார் தம்பி பயஸ். சிறைக்கொட்டடி மொத்த வாழ்க்கையையும் கபளீகரம் செய்துகொண்டதால், தம்பி பயசுக்கும், அவரது மனைவி பிரேமாவுக்கும் இருந்த ஒரே ஆசை தனது மகனுக்கு ஊரறிய திருமணம் செய்துபார்க்க வேண்டுமென்பது மட்டும்தான். அதற்காகத்தான், கடந்த 2019ஆம் ஆண்டில் ஒருமாத கால சிறைவிடுப்பு பெற்றார். அதன்பிறகு, கொரோனா நோய்த்தொற்றுப் பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், தாய், தந்தையர் பங்கேற்காமலேயே நெதர்லாந்தில் அவரது மகனின் திருமணம் நடைபெற்று முடிந்தது. தற்போது தம்பி பயசுக்கு பேரன் பிறந்திருக்கும் நிலையில், மனைவி, மகன், மருமகள், பேரன் ஆகியோரின் முகம் பார்க்கவும், உடல்நலம் குன்றியிருக்கும் தனக்கும், தனது மனைவிக்குமாக மருத்துவச்சிகிச்சைகளை மேற்கொள்ளவும், அதற்கான பொருளாதார ஏற்பாடுகளைச் செய்யவும் சிறைவிடுப்பு கோரி கடந்த 24-02-22 அன்று விண்ணப்பித்திருக்கிறார் தம்பி பயஸ். அதனை வலியுறுத்தி, அவரது மனைவி பிரேமா அவர்களும் 08-05-22 அன்று தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். இருந்தபோதிலும், இதுவரை சிறைவிடுப்புக்கான ஒப்புதல் வழங்கப்படாதிருப்பதும், காரணமின்றி காலங்கடத்துவதும் எந்தவகையிலும் ஏற்புடையதல்ல. இது சிறைவாசிகளுக்கு சட்டம் வழங்கியிருக்கும் தார்மீக உரிமையையே மறுக்கும் விதிமீறலாகும்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 1999ஆம் ஆண்டு இறுதித்தீர்ப்பளித்த மூன்று நீதிபதிகள் அமர்வில் இரு நீதிபதிகள் தம்பி ராபர்ட் பயசின் மரணத்தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தும், ஒருவர் நிரபராதியென்று கூறியும் தீர்ப்பு வழங்கினர். அத்தீர்ப்பில் பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு அடிப்படையில், ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு, 31 ஆண்டுகளாகச் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். இந்நிலையில், ஏழு தமிழர்களின் விடுதலைக்காக தமிழக அமைச்சரவை 161வது சட்டப்பிரிவின்படி 09-09-18 அன்று இயற்றிய தீர்மானத்திற்கு ஒப்புதல் தராத ஆளுநரின் செயல்பாட்டைக் கண்டித்து, கடந்த 18-05-22 அன்று 142வது சட்டப்பிரிவைப் பயன்படுத்தி தம்பி பேரறிவாளனை விடுவித்து தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். இத்தோடு, ஆளுநர் என்பவர் அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவரெனக்கூறி, மாநில உரிமையை நிலைநாட்டியது உச்ச நீதிமன்றம். இதனை அடிப்படையாகக் கொண்டு, ஆளுநருக்கு உரிய அரசியல் அழுத்தம் கொடுத்து விடுதலைக்கான முன்னெடுப்புகளைச் செய்யவும், அதுவரை எஞ்சியிருக்கும் ஆறு பேருக்குமான சிறைவிடுப்பை உறுதிசெய்யவும் கோரி வரும் நிலையில், தம்பி பயசின் சிறைவிடுப்பு கோரிக்கைக்கு அரசு ஒப்புதல் அளிக்காதது மனிதத்தன்மையற்ற கொடுஞ்செயலாகும்.

ஆகவே, தமிழக அரசானது, மீண்டும் விடுதலைகோரி போராடும் நிலைக்கு எங்களைத் தள்ளாது, ஆறு தமிழர்களின் விடுதலைக்கான முன்னெடுப்புகளை விரைந்து செய்ய வேண்டுமெனவும், தம்பி ராபர்ட் பயஸ் அவர்களது மிக நியாயமான சிறைவிடுப்புக்கோரிக்கைக்கு உடனடியாக ஒப்புதல் அளித்து உத்தரவிட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.