ரூ.100 கோடி பள்ளி மோசடி வழக்கில் அன்பில் மகேஷை சுற்றி வளைத்த அமலாக்கத்துறை! சிக்கிய 118 ரகசிய ஆவணங்கள்..!!!



private-school-bribery-case-ed-probe

தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் மற்றும் தடையில்லாச் சான்றிதழ் பெறுவதில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள புகாரில், அமலாக்கத்துறையும் விசாரணையைத் தொடங்கியுள்ளது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தொடர்பான கோணமும் விசாரிக்கப்படுகிறது. இந்த வழக்கில் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் 100-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளிடம் இருந்து அங்கீகாரம் புதுப்பித்தல் மற்றும் NOC வழங்குதல் உள்ளிட்ட பணிகளுக்காக சுமார் ரூ.100 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டதாக தமிழ்நாடு தனியார் பள்ளி உரிமையாளர்கள் சங்கம் குற்றம்சாட்டியிருந்தது. இதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

இதையும் படிங்க: ரூ.100 கோடி புகார் வழக்கு.. சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்.. அன்பில் மகேஷிடம் இன்று தீவிர விசாரணை!

முதற்கட்ட விசாரணையில் கைது

வழக்கின் முதற்கட்ட நடவடிக்கையாக பி.டி. அரசகுமார் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் மின்னணுச் சான்றுகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதன் தொடர்ச்சியாக அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அன்பில் மகேஷ் வீட்டில் சோதனை

இதையடுத்து, கடந்த செப்டம்பர் 16-ம் தேதி அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இல்லம் உள்ளிட்ட அவருக்குத் தொடர்புடைய பல்வேறு இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் வழக்கு தொடர்புடையதாகக் கூறப்படும் 118 முக்கிய ஆவணங்கள், 18 கைபேசிகள், 3 மடிக்கணினிகள், ஹார்டு டிஸ்க்குகளுடன் கூடிய 2 கணினிகள் மற்றும் பல்வேறு வங்கிக் காசோலைகள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது. இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு அன்பில் மகேஷுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதை ஏற்று, கடந்த 18-ம் தேதி சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் அவர் ஆஜரானார். அங்கு அவரிடம் 8 மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பணப் பரிவர்த்தனை குறித்து ED விசாரணை

இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்துள்ள FIR மற்றும் விசாரணையில் திரட்டப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்கை விசாரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, புகாரில் கூறப்படும் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் அவை சட்டவிரோதமாக நடைபெற்றதா என்பது குறித்து அமலாக்கத்துறை கவனம் செலுத்தி வருவதாகத் தெரிகிறது.

மத்திய குற்றப்பிரிவிடமிருந்து வழக்கு தொடர்பான ஆவணங்களைப் பெற்றுள்ள அமலாக்கத்துறை, அடுத்தகட்டமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் தொடர்பான லஞ்சப் புகார் விவகாரம் தற்போது மத்திய அமைப்பின் விசாரணை வரம்புக்கும் சென்றுள்ளது.

 

இதையும் படிங்க: 177 தனியார் பள்ளிகள்.. பல கோடி வசூல்? சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்.. CCB போலீசார் அதிரடி நடவடிக்கை!