இவுங்கள வச்சுக்கிட்டு இனி வேலைக்கு ஆகாது... ஸ்டாலின் கையில் அந்த ரகசிய அறிக்கை! தூக்கத்தை துளைத்த சீனியர்கள்....நாளை நடக்கப்போகும் மெகா சம்பவம்..!!!
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய அமைக்கப்பட்ட திமுகவின் 38 பேர் கொண்ட கள ஆய்வு குழு, தனது இறுதி அறிக்கையை நாளை அண்ணா அறிவாலயத்தில் சமர்ப்பிக்க உள்ளது. மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை, கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளுக்கு முக்கிய வழிகாட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொகுதி வாரியாக நடைபெற்ற இந்த ஆய்வில், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், கிளைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்களின் கருத்துகள் ரகசியமாகப் பெறப்பட்டன. மேலும், ஆன்லைன் வாயிலாக கிடைத்த புகார்களும் அறிக்கையில் தொகுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: இரட்டிப்பு பலத்துடன் இடைத்தேர்தலில் தவெகவுக்கு செக் வைக்கும் அதிமுக! களத்தில் வெடிக்கப்போகும் புதிய கூட்டணி குண்டு.!!!
கூட்டணி குறித்து அடிமட்ட நிர்வாகிகளின் கருத்து
ஆய்வின்போது பல்வேறு பகுதிகளில் இருந்து ஒரே மாதிரியான கருத்துகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கூட்டணி கட்சிகள் தேர்தலில் எதிர்பார்த்த அளவுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும், திமுகவின் வாக்கு வங்கியையே அதிகமாக நம்பியிருந்ததாகவும் சில நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, எதிர்கால தேர்தல்களில் கட்சி தனது சொந்த பலத்தை சோதிக்க வேண்டும் என்ற எண்ணம் அடிமட்டத்தில் வலுப்பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட முக்கிய தேர்தல்களில் தனித்துப் போட்டி குறித்து பலரும் தங்களது விருப்பத்தை பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.
மாவட்ட அமைப்பில் பெரிய மாற்றம்?
கட்சியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அமைப்பு ரீதியான மாற்றங்கள் குறித்து திமுக தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போதுள்ள 78 அமைப்பு மாவட்டங்களை 117 ஆக உயர்த்தும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற புதிய நடைமுறையை கொண்டு வருவதன் மூலம் நிர்வாகப் பொறுப்புகள் பரவலாக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் இளைஞர்கள், பெண்கள் மற்றும் நீண்டகாலமாக கட்சிக்காக பணியாற்றி வரும் நிர்வாகிகளுக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
இறுதி அறிக்கைக்கு பிறகு அதிரடி அறிவிப்புகள்?
இந்த விவகாரம் தொடர்பாக மு.க. ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
நாளை சமர்ப்பிக்கப்படவுள்ள கள ஆய்வு அறிக்கையின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு, மாவட்டச் செயலாளர்கள் மாற்றம், புதிய நிர்வாகிகள் நியமனம் மற்றும் தேர்தல் வியூகம் தொடர்பான முக்கிய முடிவுகள் விரைவில் வெளியாகலாம் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க: இடைத்தேர்தலில் இதுதான் சரி.... திமுக எடுத்த அதிரடி முடிவு! வெளியான பரபரப்பு தகவல்.!!!