கலைஞரின் மனதில் இடம்பிடித்த வெற்றி வேட்பாளரை ஓரங்கட்டிய திமுக.! அதிருப்தியில் புதுக்கோட்டை மக்கள்.!

கலைஞரின் மனதில் இடம்பிடித்த வெற்றி வேட்பாளரை ஓரங்கட்டிய திமுக.! அதிருப்தியில் புதுக்கோட்டை மக்கள்.!



dmk-didnt-give-chance-to-periyannan-arasu

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்திலும், கூட்டணிப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வந்தனர். தமிழகத்தில் பல கட்சிகளில் கூட்டணி பேச்சுவார்த்தை உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், முக்கிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். இந்தநிலையில், சமீபத்தில் திமுகவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.

 புதுக்கோட்டை மாவட்டம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக முத்துராஜா என்பவரை அறிவித்துள்ளது திமுக தலைமை. ஆனால் தற்போதைய புதுக்கோட்டை சிட்டிங் MLA திரு.பெரியண்ணன் அரசு அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கபடாததால் அப்பகுதி திமுகவினர் அதிருப்தியில் உள்ளனர்.

அதற்கு காரணம்  என்ன?

1989ல் புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் முதன்முதலாக வென்ற அன்றைய மாவட்டக் கழகச் செயலாளர் திரு அ.பெரியண்ணன் அவர்களின் பதவி காலம் இரண்டாண்டில் ஆட்சி கவிழ்ப்பினால் முடிந்து போயிற்று. பின்னர் 1991ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவருடைய உடல் நலத்தைக் காரணம் காட்டி வேட்பாளர் பட்டியலில் அவர் நிராகரிக்கப்பட்டார். அந்தத் தேர்தலில் மே 21 அன்று நிகழ்ந்த ராஜீவ் மரணம் கழகத்தை தாறுமாறாக்கியது. அப்போது தலைவர் கலைஞர் மட்டுமே துறைமுகம் தொகுதியில் வென்றார் என்பது வரலாறு.

1991ல் எந்த உடல் நலத்தைக் காட்டி நிராகரிக்கப்பட்டாரோ அந்த பெரியண்ணன் அவர்களே, புதுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர்  N.சுந்தராஜன் அவர்கள் அகால மறைவிற்குப்பின் 1994ல் புதுக்கோட்டை தொகுதி நாடாளுமன்ற இடைத்தேர்தல் வேட்பாளராக கலைஞரால் அறிவிக்கப்பட்டார். வேட்பு மனுவும் செய்தார் . ஆனால் தேர்தல் தள்ளிப் போயிற்று.அதற்கு பிறகு 1996 பொதுத்தேர்தலில் கழகம் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக திரு பெரியண்ணன் அவர்களை அறிவித்தது.

Periyannan

1993ல்  திரு வைகோ அவர்கள் மறுமலர்ச்சி திமுகவை ஆரம்பித்தபோது தமிழகம் முழுதும் மூத்த மாவட்டக் கழக செயலர்கள் அனைவரும் அவர் பின் அணிவகுத்த பின்னரும் பெரியண்ணன் அவர்கள் கலைஞரோடு பயணித்தார். தொண்டர்கள் பெரியண்ணன் அவர்களோடு அணிவகுத்தனர். குறிப்பாக 1989ல் அமைச்சரவையில் இடம்பெற்ற க.சந்திரசேகரன் வைகோவோடு பயணப்பட்டார். அன்றைக்கு மந்திரி பதவி தனக்கு வரவில்லை என்று திரு அ. பெரியண்ணன் அவர்கள் சஞ்சலமடையவில்லை. கழக முன்னணியினர் கட்சியை விட்டு சென்ற போதிலும் தொண்டர்களை தனது அன்பால் கட்டிப் போட்டார். அதன் பின் 96 ல் வெற்றி, அப்போது அமைச்சர் பதவி கனாவோடு திரு பெரியண்ணன் அவர்களை விட  தொண்டர்கள் ஆவலாக இருந்தனர்.

அப்போதும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. கொறடா என்ற பதவியைக் கொடுத்து, அண்ணா விருதையும் வழங்கி அவரை திருப்திபடுத்த நினைத்தது தலைமை .ஆனால் பதவி ஏற்று 6 மாதங்களுக்குள் காலமானார் பெரியண்ணன். பின்னர் 1997ல் நடைபெற்ற இடைத் தேர்தலில் திரு அரசு வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாரி அய்யா MLA ஆனார். பின்னர் 2001ல் கழகத்திற்கு எதிரான அலையில் புதுக்கோட்டையில் போட்டியிட்ட அரசுவும் அடித்துச் செல்லப்பட்டார்.

பின்னர் 2006 பொதுத் தேர்தல். தற்போது போலவே அப்போதும் சீட் தனக்குத்தான் என்று எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், திரு. ஜாபர் அலி வேட்பாளரானர். தோல்வி அடைந்த பின் கட்சி மாறினார். பின்னர் கடந்த சட்டமன்ற தேர்தலில் பெரியண்ணன் அரசு அவர்களுக்கு தலைமை வாய்ப்பு கொடுத்தது. ஆனால் 2016 பொதுதேர்தல் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு பெரும் சவால். காரணம் அதிமுக வேட்பாளராக கார்த்திக் தொண்டைமான் அறிவிக்கப்பட்டர். புதுக்கோட்டை மன்னரின் வாரிசான கார்த்திக் தொண்டைமான் அவர்களுக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பு மக்களிடம் தனி செல்வாக்கு உள்ளது.

ஆனாலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் பெரியண்ணன் அரசு அவர்கள் வெற்றிபெற்றார். இந்தநிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் பெரியண்ணன் அரசு அவர்களுக்கு சீட் கொடுக்காதது பெரும் ஏமாற்றம் என அப்பகுதி திமுகவை சேர்ந்த சிலர் கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.