முதல்வர் விஜய்யின் பிறந்தநாள் அன்று தவெக தொண்டர்களுக்கு அமைச்சர் போட்ட கண்டிஷன்! குக்கிராமங்கள் வரை கொண்டு சேருங்க... வேற லெவல் கொண்டாட்டம் தான்..!!!
தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ச. ஜோசப் விஜய் ஜூன் 22-ஆம் தேதி தனது 52வது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார். அவர் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால், கட்சித் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இந்த ஆண்டு கொண்டாட்டங்களுக்கு தனித்துவமான முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது.
இதையொட்டி, போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். பிறந்தநாள் நிகழ்வுகளை வெறும் கொண்டாட்டமாக மட்டுமல்லாமல், கட்சியின் கொள்கைகள் மற்றும் கொள்கைத் தலைவர்களின் சிந்தனைகளை கிராமப்புற மக்களிடம் கொண்டு செல்லும் வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! இரவோடு இரவாக வெளியிட்ட அந்த ஒரு அறிவிப்பால் அதிரும் அரசியல் களம்...!!!
கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த அறிவுறுத்தல்
அமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில், ஒன்றியச் செயலாளர்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகள் மற்றும் கிளைகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அடித்தள அமைப்புகளை மேலும் வலுப்படுத்தும் முயற்சியில் நிர்வாகிகள் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆடம்பரத்தை தவிர்த்து மக்கள் நலப் பணிகள்
விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டங்களின் போது ச. ஜோசப் விஜய் பெயரில் ஆடம்பரமான பிளக்ஸ் பேனர்கள் மற்றும் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கு பதிலாக ஏழை, எளிய மக்களுக்கு உணவு மற்றும் உடைகள் வழங்குதல், பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்குதல் போன்ற மக்கள் நலச் செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அதோடு, மரக்கன்றுகள் நடுதல், ரத்ததான முகாம் நடத்துதல், மருத்துவ முகாம்கள் அமைத்தல் போன்ற சமூகப் பணிகளிலும் தொண்டர்கள் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறப்புப் பிரார்த்தனைக்கு அழைப்பு
மேலும், பிறந்தநாளை முன்னிட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடத்துமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல், திருக்கோவில்களில் முதலமைச்சர் விஜய்யின் பெயரில் ‘ச. ஜோசப் விஜய், பூசம் நட்சத்திரம், கடக ராசி’ என அர்ச்சனை செய்து வழிபாடுகள் நடத்த வேண்டும் என்றும் தனது பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால், இந்த ஆண்டு விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அரசியல் நிகழ்வுகளையும், மக்கள் நலப் பணிகளையும் இணைக்கும் வகையில் மாநிலம் முழுவதும் நடைபெறும் என கட்சி வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க: என்ன ஒரு மனசு பாருங்க...! முதலமைச்சர் விஜய் பிறந்தநாளில் மக்களுக்கு அமைச்சர் சொன்ன சர்ப்ரைஸ் நியூஷ்..! கொண்டாட்டத்தில் தமிழக மக்கள்..!!!