இப்படி ஒரு காமெடியா? சாமித்துறை அமைச்சரே... எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேச பேச குலுங்கி குலுங்கி சிரித்த CM விஜய்! சட்டசபை கலகலப்பு வீடியோ!!!



tamil-nadu-assembly-debate-paddy-storage-farmers-welfar

சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இன்று பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. நெல் சேமிப்புக் கிடங்குகள், விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள், முந்தைய திமுக ஆட்சியின் செயல்பாடுகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து உறுப்பினர்கள் மாறி மாறி கேள்விகளையும் விமர்சனங்களையும் முன்வைத்தனர்.

சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ரமேஷ், திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட நெல் சேமிப்புக் கிடங்குகள் எங்கே உள்ளன என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த திமுக சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி, நெல் சேமிப்புக் கிடங்குகள் கட்டப்படவில்லை என கூறுவது முற்றிலும் தவறான தகவல் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சற்றுமுன்.. பயிர்க்கடன் தள்ளுபடி...! பேரவையில் வெளியிட்ட அமைச்சர்..!!!

திமுக ஆட்சிக் காலத்தில் 18 மாவட்டங்களில் 54 இடங்களில் நெல் சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவை முறையாக கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டில் இருப்பதாகவும் சக்கரபாணி விளக்கம் அளித்தார்.

விவசாயிகள் நலன் குறித்து மோதல்

விவசாயிகள் நலன் தொடர்பான விவாதத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆளும் அரசை கடுமையாக விமர்சித்தார். புதிய ஆட்சியில் விவசாயிகளுக்கு ஏராளமான நலத்திட்டங்கள் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், எதிர்பார்த்த அளவுக்கு பலன்கள் வழங்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், ‘அடுத்த ஜென்மம் வந்தால் விவசாயியாகப் பிறக்க வேண்டும்’ என முதலமைச்சர் கூறியதை நம்பி விவசாயிகள் ஏமாந்துவிட்டதாகவும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விமர்சனம் செய்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் செங்கோட்டையன், வரலாற்றில் எப்போதாவது கரும்புக்கு டன்னுக்கு ரூ.4,000 வழங்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார். தற்போது முதலமைச்சர் அந்த தொகையை வழங்கியுள்ளதாகவும், நெல்லுக்கான விலையும் இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

விவசாயிகளை வாழவைக்கும் தலைவராக முதலமைச்சர் விஜய் திகழ்கிறார் என்றும், இந்த உண்மை நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் காட்டமாகக் கூறினார்.

திமுக ஆட்சி குறித்து மீண்டும் குற்றச்சாட்டு

முன்னதாக, திமுக அரசு ‘போராட்டம் இல்லாத அரசாங்கமாக’ செயல்பட்டதாக எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர் நிர்மல்குமார், ஜனநாயக முறையில் தங்களது உரிமைகளுக்காக போராடிய பொதுமக்கள் மீது குண்டர் சட்டம் பாய்ச்சிய அரசுதான் திமுக அரசு என கடுமையாக குற்றம்சாட்டினார்.

‘முரசொலி பார்த்து கொள்கைகளை கற்றவர்கள்’ – பன்னீர்செல்வம்

இதற்கிடையே தமிழக வெற்றிக்கழக அரசை விமர்சித்துப் பேசிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ‘நீங்கள் படம் பார்த்து வந்தவர்கள்; நாங்கள் அப்படியல்ல, முரசொலி பார்த்து கொள்கைகளைப் பார்த்து வந்தவர்கள்’ என கூறினார்.

மேலும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரை சுட்டிக்காட்டி, உண்மையா, பொய்யா என தெரியாமல் ரீல்ஸ் கண்டென்ட்டை அப்படியே எடுத்துவிடுகிறார் என்றும் அவர் விமர்சித்தார்.

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் இந்த பேச்சின்போது முதலமைச்சர் விஜய் விழுந்து விழுந்து சிரித்ததாக கூறப்படுகிறது. சட்டப்பேரவையில் நடைபெற்ற இந்த காட்சிகள் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இதனால் தமிழக சட்டப்பேரவை விவாதம் இன்று முழுவதும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. விவசாயிகள் நலன் முதல் முந்தைய ஆட்சியின் செயல்பாடுகள் வரை பல்வேறு விவகாரங்களில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேருக்கு நேர் கருத்துகளை முன்வைத்த நிலையில், விஜய் அரசு மீதான அரசியல் விமர்சனங்களும் கவனம் பெற்றுள்ளன.

 

இதையும் படிங்க: 1969 மேட்டரை இழுத்த CM விஜய்..! மலிவான அரசியல் நாங்க செய்யல.. வைரலாகும் வீடியோ..!!!