சமாதானம் பேச சென்ற இடத்தில் தகராறு.. மாமியாரை வெட்டிக்கொலை செய்த மருமகன்.. மனைவி படுகாயம்.!madurai-thirumangalam-mother-in-law-killed-by-son-in-la

வங்கியில் அடகுவைத்து நகையை மீட்பதில் பிரச்சனை ஏற்பட்டு மனைவி தாய் வீட்டிற்கு சென்ற நிலையில், மாமியாரின் வீட்டிற்கு சமாதானம் பேச சென்ற மருமகன் வாய்தகராறில் ஆத்திரமடைந்து மாமியாரை கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம், நெடுமதுரை பகுதியில் வசித்து வருபவர் பால்பாண்டி. இவரின் மனைவி காளியம்மாள் (வயது 48). தபதிகளின் மகள் ஜெயா என்ற ஜெயக்கொடி (வயது 30). கூடக்கோவில் கீழ உப்பிலிக்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 34). ஜெயக்கொடிக்கும் - முனியாண்டிக்கும் கடந்த 7 வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

இதனைத்தொடர்ந்து, தம்பதிகள் இருவரும் கீழ உப்பிலிக்குண்டு பகுதியிலேயே வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகன், மகள் குழந்தைகளாக உள்ளனர். முனியாண்டிக்கும் - ஜெயாவிற்கும் அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், திருமங்கலம் வளையங்குப்பம் பகுதியில் ஒத்திக்கு வீடு பார்த்துள்ளனர். இதற்கு தேவையான பணத்திற்காக மனைவியின் நகையை முனியாண்டி அடமானம் வைத்துள்ளார். 

இந்த பணத்தை வைத்து வீடு ஒத்திக்கும் எடுக்கப்பட்ட நிலையில், வங்கியில் வைத்த நகையினை முனியாண்டி திரும்பி கொடுக்காமல் இருந்துள்ளார். இதுகுறித்து தம்பதியிடையே தகராறு ஏற்படவே, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஜெயா தனது தாயாரின் வீட்டிற்கு சென்றுவிட்டார். மேலும், கணவரின் மீது திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். 

madurai

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்த, வரும் 10 ஆம் தேதி இருவரையும் காவல் நிலையத்திற்கு வரச்சொல்லியுள்ளனர். காவல் நிலையத்தில் புகார் அளித்தது முனியாண்டிக்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தவே, மாமியாரின் வீட்டிற்கு சென்றவர் மனைவி மற்றும் மாமியாரிடம் எதற்காக காவல் நிலையத்தில் புகார் அளித்தீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் இருதரப்பு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்த தகராறில் ஆத்திரமடைந்த முனியாண்டி, மாமியாரின் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்தே மாமியார் காளியம்மாள் மற்றும் மனைவி ஜெயாவை வெட்டி இருக்கிறார். காளியம்மாளுக்கு தலை மற்றும் தாடை பகுதியில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட, அவர் இரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். ஜெயாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்துவர, முனியாண்டி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். 

இதனையடுத்து, இந்த விஷயம் தொடர்பாக கூடக்கோவில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ஜெயாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காளியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள், தலைமறைவான முனியாண்டியை தேடி வருகின்றனர்.