மக்களுக்கு ஷாக்.. நாடு முழுவதும் சிலிண்டர் விலை உயர்வு.. உணவுகளின் விலையும் உயரும் அபாயம்.!



LPG Cylinder Price Hike in India: Cooking Gas Cost Rises, Food Prices May Increase Soon

இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. வீட்டு பயன்பாட்டு சிலிண்டருடன் வணிக சிலிண்டர் விலையும் உயர்ந்ததால், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cylinder Price Hike: மத்திய கிழக்கு பகுதியில் உருவாகியுள்ள போர் பதற்றம் உலகளாவிய பொருளாதாரத்தையும் பாதிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக கச்சா எண்ணெய் விநியோகம் தடைபடும் சூழல் ஏற்பட்டுள்ளதால், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. ஈரான் நீர்முனையை மூடியிருப்பதால் எண்ணெய் கப்பல்கள் கடலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல நாடுகளின் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் அச்சம் நிலவுகிறது.

இந்தியாவில் சமையல் எரிவாயு விலை உயர்வு:

இந்த சூழ்நிலையின் தாக்கம் இந்தியாவிலும் பிரதிபலிக்க தொடங்கியுள்ளது. அதன்படி சென்னையில் இன்று முதல் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் நாடு முழுவதும் சிலிண்டர் விலை மாற்றம் அமலுக்கு வந்ததாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. வீட்டு பயன்பாட்டுக்கான 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டு, முன்பு ரூ.868.50 ஆக இருந்த விலை தற்போது ரூ.928.50 ஆக உயர்ந்துள்ளது.

LPG cylinder price

வணிக சிலிண்டர் விலை உயர்வு:

அதேபோல ஹோட்டல்கள் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எல்பிஜி சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது. ரூ.114.50 உயர்த்தப்பட்ட நிலையில், அதன் விலை தற்போது ரூ.2043.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வின் காரணமாக விரைவில் உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்கக்கூடும் என வணிகர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் உணவு தயாரிப்பு நிறுவனங்கள் அதிக அளவில் வணிக எல்பிஜி சிலிண்டர்களைப் பயன்படுத்துவதால், செலவு உயர்வை சமாளிக்க உணவுகளின் விலையை உயர்த்தும் சூழல் உருவாகலாம் என கூறப்படுகிறது. 

தொடரும் விலை ஏற்றம்:

எரிபொருள் விநியோகத்தில் பெரிய தட்டுப்பாடு ஏற்படாது என அதிகாரிகள் தெரிவித்தாலும், உலகளாவிய பதற்றம் காரணமாக விலை ஏற்றம் தொடரும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் பொதுமக்களின் தினசரி செலவுகளும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.