விளையாடப் போன சிறுவனுக்கு வாஸ்து தூண் வடிவில் வந்த எமன்...! நொடியில் 4-ஆம் வகுப்பு மாணவன் கொடூரமாக பலி... நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!!



karnataka-schoolboy-killed-collapsed-concrete-pillar

கர்நாடக மாநிலம் சிக்நாயகனஹள்ளி தாலுகா பெலகிஹள்ளி கிராமத்தில், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கக் கட்டிடத்தின் சிமெண்ட் தூண் இடிந்து விழுந்ததில் 10 வயது பள்ளி மாணவன் தனுஷ் உயிரிழந்தார். சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென தூண் இடிந்து விழுந்ததில் சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விளையாடியபோது திடீரென இடிந்த தூண்

பெலகிஹள்ளி அரசு உயர் தொடக்கப்பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்த தனுஷ், வழக்கம்போல் மற்ற குழந்தைகளுடன் கட்டிடத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த கூடுதல் சிமெண்ட் தூண் உடைந்து சிறுவன் மீது விழுந்தது. இதனால் பதற்றமடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: உல்லாச வாழ்க்கைக்கு இடையூறு.. கணவர், 4 வயது மகன் கொலை.. இளம்பெண்ணின் அதிர்ச்சி செயல்.! 

தூண் விழுந்ததில் மற்ற இரண்டு குழந்தைகளுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. அதே நேரத்தில், தனுஷை மீட்க முயன்றபோதும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை.

அடித்தளம், இரும்புக் கம்பிகள் இல்லாமல் கட்டப்பட்ட தூண்

கட்டிடத்தின் முன்பகுதியில் ஏற்கனவே மூன்று தூண்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, வாஸ்து நிபுணரின் ஆலோசனையின் பேரில் கூடுதலாக ஒரு தூண் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முறையான அடித்தளமோ, தேவையான இரும்புக் கம்பிகளோ இல்லாமல் அந்த தூண் கட்டப்பட்டதே இடிபாட்டுக்கு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து வட்டாட்சியர் மற்றும் கல்வித்துறை சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சிக்நாயகனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டுமானக் கோளாறு மற்றும் பராமரிப்பில் ஏற்பட்ட அலட்சியம் உள்ளிட்ட கோணங்களிலும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

அதிகாரிகள் நேரில் ஆய்வு; 

தகவல் அறிந்ததும் முன்னாள் அமைச்சர் ஜே.சி.மதுசாமி, வட்டாட்சியர் மமதா, காவல் கண்காணிப்பாளர் அசோக் கே.வி., குழந்தைகள் உரிமை ஆணைய இயக்குனர் சத்தியநாராயணா ஷெட்டி உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். கட்டிடத்தின் பாதுகாப்பு மற்றும் தூண் அமைக்கப்பட்ட விதம் குறித்து அவர்கள் தகவல்களை சேகரித்தனர்.

உயிரிழந்த தனுஷின் பெற்றோர் ஆனந்தமூர்த்தி மற்றும் நிமிதா குடும்பத்தினருக்கு தும்கூர் பால் ஒன்றியம் சார்பில் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷின் உயிரிழப்பு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கட்டுமானப் பணியில் விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பதும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: கையில் கிளவுஸ்சுடன் பள்ளி முதல்வர் வீட்டுக்குள் புகுந்து... 10 ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த பயங்கரம்! திடுக்கிடும் பின்னணி...!!!