வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
நிவாரணம் கேட்டு டெல்லி சென்ற முதல்வர் 4 விருதுகளோடு வீடு திரும்பினார்!
கஜா புயலால் தமிழகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.
தமிழக அரசு இதற்கு நிவாரண நிதியாக முதற்கட்டமாக 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் பழனிச்சாமி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து மத்திய அரசிடம் நிவாரண நிதி கேட்டு கோரிக்கை வைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்காக மத்திய அரசிடம் ரூ.15,000 கோடி கேட்கப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.1500 கோடியை உடனடியாக வழங்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் புயல் பாதிப்பு குறித்த விவரங்களை பிரதமரிடம் தெரிவித்ததாகவும் விரைவில் மத்திய குழு தமிழகம் வரும் என்றும் முதல்வர் எடப்பாடி கூறினார்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து இந்தியா டுடே சார்பில் புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டார். பல மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொண்ட இந்த விழாவில் இந்திய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநில முதல்வர்களுக்கு விருதுகள் வழங்கினார்.
இதில் தமிழகத்திற்கு அனைத்து துறைகளின் ஒட்டுமொத்த செயல்பாடு - சட்டம், ஓழுங்கு சிறப்பான முறையில் பராமரிப்பு, சட்டம் - ஒழுங்கை பராமரிப்பதில் குறுகிய காலத்தில் சிறந்த முன்னேற்றம் - சிறப்பான சுற்றுலா வளர்ச்சிப்பணி ஆகிய 4 பிரிவுகளில் சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.
புதுடெல்லி நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழக முதல்வர் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவிடம் இருந்து 4 பிரிவுகளுக்கான விருதுகளை பெற்றுக்கொண்டார்.