இறந்துவிட்டதாக நினைத்த குழந்தை இறுதிச்சடங்கில் கண்விழித்து மீண்டும் இறந்துபோன சம்பவம்! அதிர்ச்சி தகவல்

இறந்துவிட்டதாக நினைத்த குழந்தை இறுதிச்சடங்கில் கண்விழித்து மீண்டும் இறந்துபோன சம்பவம்! அதிர்ச்சி தகவல்



Dead baby wakeup and dead again near Assam

இறந்துவிட்டதாக நினைத்த குழந்தை இறுதி சடங்கின்போது கண்விழித்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் திப்ருக்கார் மாவட்டத்தில் தேயிலை தோட்ட மருத்துவமனை ஒன்று உள்ளது. தேயிலை தோட்டத்தில் வேலைபார்க்கும் ஊழியர்கள் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தம்பதியினர் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்த தங்களது இரண்டுமாத குழந்தையை தூக்கிக்கொண்டு அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர்.

அந்த நேரம் பார்த்து அந்த மருத்துவமனையில் மருத்துவர்களோ, செவிலியர்களோ இல்லை. கம்பவுண்டர் மட்டுமே இருந்துள்ளார். குழந்தையை பரிசோதித்த கம்பவுண்டர் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர் குழந்தையை வீட்டிற்கு தூக்கிச்சென்று அங்கு இறுதி சடங்கு செய்யும் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இந்நிலையில் குழந்தையை அடக்கம் செய்யும் சில நிமிடங்களுக்கு முன் குழந்தை மீண்டும் கண்விழித்து அசைத்துள்ளது. இதை பார்த்த பெற்றோருக்கு சற்று மகிழ்ச்சியும் , நிம்மதியும் ஏற்பட்டது. ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்டநேரம் நிலைக்கவில்லை. குழந்தை மீண்டும் மயங்கியநிலையில் அவர்கள் குழந்தையை வேறொரு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தேயிலை தோட்ட மருத்துவமனையின் அலட்சியத்தாலும், கம்பவுண்டர் சொன்ன தப்பான தகவலாலும்தான் குழந்தை இறந்துவிட்டதாகவும், அப்போதே உரிய சிகிச்சை வழங்கியிருந்தால் குழந்தை பிழைத்திருக்கும் என குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து அந்த கம்பவுண்டரை கைது செய்த போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.