இப்படி கூட மரணம் வருமா? போனில் பேசிக்கிட்டே நடந்து சென்ற பாஜக கவுன்சிலர்... கண்ணிமைக்கும் நொடியில் நடந்த அதிர்ச்சி! சிக்கிய சிசிடிவி காட்சி!!!
மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாராவில் பாஜக கவுன்சிலர் லோகேஷ் தெஹரியா சாலையில் நடந்து செல்லும் போது திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அவர் போனில் பேசிக்கொண்டிருந்த நிலையில் ஏற்பட்ட இந்த துயரச் சம்பவம் அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
போனில் பேசிக்கொண்டிருந்தபோதே திடீர் சரிவு
தகவலின்படி, உள்ளூர் பாஜக பிரமுகரும் கவுன்சிலருமான லோகேஷ் தெஹரியா தனது வீட்டிற்கு அருகிலுள்ள சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது செல்போனில் பேசிக்கொண்டிருந்த அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சில நொடிகளில் நிலைதடுமாறி சாலையிலேயே சரிந்து விழுந்தார்.
மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் பலனில்லை
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக ஓடிவந்து அவருக்கு உதவினர். அதன்பின் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாரடைப்பு காரணமாக அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை
லோகேஷ் தெஹரியாவின் திடீர் மறைவு அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இளம் வயதிலேயே மக்கள் பிரதிநிதி ஒருவர் உயிரிழந்தது சிந்த்வாரா பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.