வெடித்த வென்டிலேட்டர்... துடிதுடித்து உயிரிழந்த 3 பச்சிளம் குழந்தைகள்..! எச்சரிக்கை ஒலி அடித்தும் அசந்து தூங்கிய செவிலியர்கள்... சிசிடிவி மூலம் வெளிவந்த அதிர்ச்சி உண்மைகள்!!!
அமராவதி மாவட்ட மகளிர் மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட வென்டிலேட்டர் வெடிப்பில் 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி அதிகாலை 2.50 மணியளவில் இந்த விபத்து நடந்தது. தற்போது வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகள், பணியில் இருந்த செவிலியர்களின் செயல்பாடு குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளன.
எச்சரிக்கை ஒலி எழுந்தும் விழிக்காத செவிலியர்கள்
விபத்து ஏற்படுவதற்கு முன்பாகவே அபாய எச்சரிக்கை ஒலியும் சிவப்பு எச்சரிக்கை விளக்கும் தொடர்ந்து 3 முறை செயல்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், வரவேற்பறையில் இருந்த 2 செவிலியர்கள் அப்போது தூங்கிக் கொண்டிருந்தது சிசிடிவி பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வென்டிலேட்டர் வெடித்துச் சிதறியதைத் தொடர்ந்து தீப்பிடித்த நிலையில், வெடிச்சத்தம் கேட்ட பிறகே இருவரும் திடுக்கிட்டு எழுந்துள்ளனர். அதன்பின் தீயை அணைக்க அவர்கள் முயன்ற காட்சிகளும் பதிவாகியுள்ளன. ஆனால், தீயணைப்பு நடவடிக்கை தொடங்குவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து தற்போது கேள்விகள் எழுந்துள்ளன.
11 பேர் கொண்ட குழு அறிக்கை தாக்கல்
பணியில் இருந்த ஊழியர்களின் செயல்பாடு குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், மருத்துவமனையின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும் விசாரணை கோரப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்ட தகவல்களுக்கும், களத்தில் காணப்படும் நிலவரத்துக்கும் முரண்பாடுகள் இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான டாக்டர் சுனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையே, விபத்து குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட 11 பேர் கொண்ட உயர்மட்டக் குழு தனது முழுமையான அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
அறிக்கை வெளியிடப்படுமா?
உயர்மட்டக் குழுவின் அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும், அதன் முழு விவரங்கள் இதுவரை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படவில்லை. சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், குழந்தைகள் உயிரிழக்க காரணமான சூழ்நிலைகள், எச்சரிக்கை அமைப்பு செயல்பட்ட விதம் மற்றும் பணியாளர்களின் பொறுப்பு குறித்து முழுமையான விளக்கம் வெளியாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: பார்த்து போங்க மக்களே...! டிப்பர் லாரி ஸ்கூட்டர் மீது மோதி தூக்கி வீசப்பட்டு துடிதுடித்து இறந்த வாலிபர்! அதிர்ச்சி வீடியோ...!!!