பப்ஜி விளையாடுவதை கண்டித்ததால் ஆத்திரம்.. தாய், குடும்ப உறுப்பினர்கள் என 4 பேரை சுட்டுக்கொன்ற 14 வயது சிறுவன்.!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில், 14 வயது சிறுவன் தனது தாய் மற்றும் 1 சகோதரன், 2 சகோதரியுடன் வசித்து வருகிறார். சிறுவனின் தாயான நஹீத் முபாரக் (வயது 45) சுகாதார பணியாளராக வேலைபார்த்து வருகிறார். நஹீத்தின் கணவர் தனது மனைவியை விவாகரத்து செய்து சென்றுவிட்டார்.
இந்நிலையில், லாகூரில் உள்ள கஹனா பகுதியில், கடந்த வாரத்தின் போது நஹீத் முபாரக், அவரின் மகன் தைமூர் மற்றும் 2 மகள்கள் ஆகியோர் பிணமாக மீட்கப்பட்டனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், நால்வரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கொலையாளி யார்? என காவல் துறையினர் விசாரணை நடத்துகையில், 14 வயது சிறுவனே தனது குடும்பத்தை கொலை செய்த பரபரப்பு தகவல் உறுதியாகியுள்ளது. சிறுவனை கைது செய்து விசாரணை செய்கையில், தாயார் பப்ஜி விளையாடுவதை கண்டித்ததால் தாய், சகோதரன் மற்றும் சகோதரிகளை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
நஹீத் முபாரக் தனது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக உரிமம் பெற்ற கை துப்பாக்கியை வாங்கி வைத்திருந்த நிலையில், அந்த துப்பாக்கியாலேயே சொந்த மகனால் அவர் மற்றும் அவரின் குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். கைதாகியுள்ள 14 வயது சிறுவன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.