அணை உடைந்து ஊருக்குள் புகுந்த வெள்ளநீர்; நூற்றுக்கணக்கானோர் மாயம்

அணை உடைந்து ஊருக்குள் புகுந்த வெள்ளநீர்; நூற்றுக்கணக்கானோர் மாயம்


dam collapsed 100 missing

தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸின் அட்டாபேயு மாகாணத்தில் நீரில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தின் கீழ் கடந்த 2013-ம் ஆண்டு புதிய அணை கட்டும் பணி தொடங்கப்பட்டது. அணையின் கட்டுமானப்பணி 90 சதவிகிதம் முடிந்த நிலையில், அடுத்தாண்டு திறக்க ஏற்பாடுகள் நடந்து வந்தது.

இந்நிலையில், அந்த அணை உடைந்ததால் அதிலிருந்து வெளியேறிய வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர். இதில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் வெள்ளமாக உருவெடுத்து 6 கிராமங்களை மூழ்கடித்தது. இந்த விபத்தில் தற்போது வரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக 6000-க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர்.

laos

தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக "பெருக்கெடுத்த நீர்" அணையை நோக்கி பாய்ந்ததை தாங்காமல், அணை உடைந்துவிட்டதாக இதன் கட்டுமான நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லவோஸ் ராணுவம், மீட்பு படையினர் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்கப்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர். லாவோஸ் நாட்டு பிரதமர் தொங்லவுன், அணை உடைந்ததால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து நிவாரணங்களை வழங்கும் பணியை முடுக்கிவிட்டுள்ளார். கம்யூனிச நாடான லாவோஸ் ஆசியாவின் மிகவும் ஏழை நாடு என்றும் ரகசியமான நாடு என்றும் அறியப்படுகிறது. ஆனால், இந்த நாடு 'ஆசியாவின் பேட்டரி'யாக மாறுவதை நோக்கமாகக் கொண்டு அண்டை நாடுகளுக்கு நீர் மின் நிலையங்கள் மூலம் மின்சாரத்தை விற்பனை செய்து வருகிறது. அரசின் நீர்மின் அணைகள் கட்டும் திட்டத்தை அந்நாட்டின் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் அதனால் ஏற்படும் ஆபத்தைக் கூறி எச்சரித்து வந்தனர்.