அப்பாவுக்கு கார்னா உசுரு! அப்பாவின் சடலத்துடன் ரூ. 1.5 கோடி மதிப்புள்ள சொகுசு காரை புதைத்த பிள்ளைகள்! அடுத்த நாளே அதிரடி காட்டிய அரசாங்கம்!!!
சீனாவின் லியோனிங் மாகாணத்தில், இறந்த தந்தையின் ஆசையை நிறைவேற்ற முயன்ற குடும்பம் கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. சொகுசு காருடன் சேர்த்து சடலத்தை புதைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, அதிகாரிகள் தலையீட்டுக்கு வழிவகுத்தது. தற்போது அந்த குடும்பம் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை சந்தித்து வருகிறது.
ஆசையை நிறைவேற்றிய குடும்பம்
70 வயதான ஒருவர் சமீபத்தில் உயிரிழந்தார். கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த அவர் நினைவாக, அவரது பிள்ளைகள் சுமார் 1.49 கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் S450L காரை சடலத்துடன் சேர்த்து புதைக்க முடிவு செய்தனர். அந்த காரின் ‘8888’ என்ற பேன்சி நம்பர் பிளேட்டின் மதிப்பு மட்டும் சுமார் 13.6 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.
சிவப்பு துணியால் அலங்கரிக்கப்பட்ட காரை நிலத்தில் புதைக்கும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டனர். அவர்களுக்கு தலா 6,800 ரூபாய் அன்பளிப்பாக வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசின் திடீர் தலையீடு
இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலானதும், அடுத்த நாளே அரசு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றனர். இதை “சட்டவிரோதமான, பிற்போக்குத்தனமான செயல்” என சாடிய அவர்கள், உடனடியாக காரை தோண்டி எடுக்க உத்தரவிட்டனர். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயமும் காரணமாக குறிப்பிடப்பட்டது.
அபராதம் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு
இதையடுத்து, நிலத்தை பழைய நிலைக்கு கொண்டு வருதல், அபராதம் செலுத்துதல், மேலும் பொது மன்னிப்பு கோருதல் போன்ற நடவடிக்கைகள் அந்த குடும்பத்துக்கு விதிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து நெட்டிசன்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “பழமையான மரபு போல காகித பொருட்களை எரிப்பதற்குப் பதிலாக நிஜ காரை புதைப்பது மூடநம்பிக்கை மட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கும் தீங்கு” என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.