சொந்த மகளை வைத்து மனைவிக்கு கணவன் போட்ட திட்டம்..! மரணப் பொறியில் சிக்கிய மனைவி... நடுங்க வைக்கும் பின்னணி..!!!



ankur-patel-charged-with-wife-murder-in-chicago

அமெரிக்காவின் சிகாகோவில், பிரிந்து வாழ்ந்த மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 31 வயது அங்குர் படேல் கைது செய்யப்பட்டுள்ளார். 32 வயதான மனைவி புதிய துணையுடன் வாழ விரும்பியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவர் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. கொலைக்குப் பிறகு இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற படேலை, விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக போலீசார் கைது செய்தனர்.

மகளைச் சந்திக்கலாம் எனக் கூறி மனைவியை வரவழைத்தார்

கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்த தம்பதியினருக்கு இடையே குடும்பப் பிரச்சினை நீடித்ததாகக் கூறப்படுகிறது. மனைவி வேறொருவருடன் லூசியானாவுக்குச் சென்றதால் அங்குர் படேல் ஆத்திரமடைந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, மகளைச் சந்திக்கலாம் எனக் கூறி மனைவியைச் சிகாகோவுக்கு வரவழைத்துள்ளார். ஆனால், மகள் ஏற்கெனவே இந்தியாவுக்கு அனுப்பப்பட்டிருந்ததை அறியாமல் வந்த மனைவி, கணவருடன் மீண்டும் சேர மறுத்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அவரைக் கழுத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக படேல் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 101 வயதிலும் கோக், ஸ்பிரைட், ஒயின் குடித்து ஆரோக்கியமாக இருக்கும் தாத்தா..! உணவின் ரகசியத்தை கேட்டா அசந்துருவீங்க..!!!

குடியிருப்பில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்

கட்டடத்துக்கு வெளியே காத்திருந்த மனைவியின் புதிய துணை, அவர் நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகமடைந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். ஆனால், சரியான குடியிருப்பை அடையாளம் காண முடியாததால் போலீசார் அப்போது அங்கிருந்து சென்றதாகக் கூறப்படுகிறது. அன்று இரவு படேலின் நண்பர்கள் அவரது வீட்டுக்கு வந்தபோது, சலவை இயந்திரம் அருகே அந்தப் பெண் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததைக் கண்டுள்ளனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடற்கூறாய்வில், உயிரிழப்பதற்கு முன்பு அந்தப் பெண் தற்காத்துக் கொள்ளப் போராடியதற்கான காயங்கள் இருந்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தியாவுக்குத் தப்ப முயன்றபோது கைது

கொலைக்குப் பிறகு இந்தியாவுக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்ட படேல், சிகாகோவின் ஓ’ஹேர் சர்வதேச விமான நிலையத்துக்குச் சென்றுள்ளார். அங்கு டிக்கெட் கவுண்டர் மூடப்பட்டிருந்ததால் அருகிலுள்ள ஹோட்டலில் தங்கியதாகவும், கொலைக்குப் பயன்படுத்திய கத்தியை மறைத்து வைத்து புதிய ஆடைகளை வாங்கியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மறுநாள் இந்தியாவுக்கான விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக போலீசார் அவரைக் கைது செய்தனர்.

விசாரணையின்போது, மனைவி புதிய வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்ததாக படேல் ஒப்புக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அவர் மீது முதல்நிலைக் கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

இதையும் படிங்க: அடக்கடவுளே! 18 மாதக் குழந்தையை 6-வது மாடியில் இருந்து தூக்கி வீசிய கொடூரம்! பின்னணியில் 10 வயது சிறுமி... அதிரவைக்கும் காரணம்? கொடூர சம்பவம்..!!!