101 வயதிலும் கோக், ஸ்பிரைட், ஒயின் குடித்து ஆரோக்கியமாக இருக்கும் தாத்தா..! உணவின் ரகசியத்தை கேட்டா அசந்துருவீங்க..!!!
சீனாவில் 101 வயதிலும் கோகோ கோலா, ஸ்பிரைட் போன்ற குளிர்பானங்களை குடித்துக்கொண்டு, நண்டு, மீன், பன்றி இறைச்சி என தனக்குப் பிடித்த உணவுகளை சாப்பிட்டு வரும் முதியவர் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளார். ஜெஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த லூ ஷிஸெங் (Lu Shizeng) என்ற அந்த முதியவரின் உணவுப் பழக்கமும், அன்றாட வாழ்க்கை முறையும் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
ஸ்பிரைட்டில் ஒயின் கலந்து குடிக்கும் 101 வயது தாத்தா!
பொதுவாக வயதாகிவிட்டால் உணவில் பல கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று கூறப்படுவதுண்டு. ஆனால், லூ ஷிஸெங்கின் உணவுப் பழக்கம் சற்று வித்தியாசமாக உள்ளது. கோகோ கோலா, ஸ்பிரைட் போன்ற குளிர்பானங்களை விரும்பி குடிக்கும் இவர், கடல் உணவுகளையும் ஆசையாக சாப்பிடுகிறார். குறிப்பாக நண்டு, மீன், பன்றி இறைச்சி ஆகியவை இவருக்கு மிகவும் பிடித்தமான உணவுகள்.
அதிலும் குளிர்ந்த ஸ்பிரைட்டில் சில துளிகள் ஒயிட் ஒயின் கலந்து குடிப்பது இவரது வழக்கமாக உள்ளது. சாப்பாட்டிலும் அரை கிண்ணம் சாதம் எடுத்துக்கொண்டு, அதனுடன் நிறைய கடல் உணவுகளை சேர்த்து சாப்பிடுகிறார். 101 வயதிலும் தனக்குப் பிடித்த உணவுகளை எந்தத் தயக்கமும் இல்லாமல் சாப்பிட்டு வருவது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதிகாலை 4 மணிக்கு விழிப்பு.. இரவு 8 மணிக்கே தூக்கம்!
உணவில் பெரிய கட்டுப்பாடுகள் இல்லாவிட்டாலும், அன்றாட வாழ்க்கையில் நேரத்தை சரியாக கடைபிடித்து வருகிறார் லூ ஷிஸெங். தினமும் அதிகாலை 4 மணிக்கே கண்விழிக்கும் இவர், உடனடியாக படுக்கையைவிட்டு எழுவதில்லை. அதற்கு பதிலாக படுக்கையில் இருந்தபடியே கை, கால்களை நீட்டி மடக்குவது போன்ற எளிய உடற்பயிற்சிகளை சுமார் இரண்டு மணி நேரம் செய்கிறார்.
அதன்பிறகு காலை 6 மணிக்கு படுக்கையைவிட்டு எழுகிறார். மாலை 5 மணிக்கெல்லாம் இரவு உணவை முடித்துக்கொண்டு, இரவு 8 மணிக்கே தூங்கச் சென்றுவிடுகிறார். பல ஆண்டுகளாக கடைபிடித்து வரும் இந்த ஒழுங்கான வாழ்க்கை முறை அவரது உடல்நலத்திற்கு உதவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
101 வயதிலும் நல்ல நினைவாற்றல்.. மாதம் ரூ.11 ஆயிரம் உதவித்தொகை!
வயதான நிலையிலும் தனக்குத் தேவையான வேலைகளை முடிந்தவரை தானே செய்து வந்துள்ளார். தள்ளுவண்டியில் மார்க்கெட்டுக்குச் சென்று, தனக்குப் பிடித்த நண்டு மற்றும் காய்கறிகளை வாங்கி வருவதையும் வழக்கமாக வைத்திருந்தார். ஆனால், சில மாதங்களுக்கு முன்பு தவறி கீழே விழுந்ததைத் தொடர்ந்து, அவருக்கு உதவியாக குடும்பத்தினர் பராமரிப்பாளர் ஒருவரை நியமித்துள்ளனர்.
தற்போதும் நல்ல நினைவாற்றலுடன் இருக்கும் லூ ஷிஸெங்கிற்கு, சீன அரசு சார்பில் மாதந்தோறும் 800 யுவான் முதியோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.11 ஆயிரம் ஆகும்.
அதே நேரத்தில், குளிர்பானங்கள் குடிப்பதும் கடல் உணவுகளை சாப்பிடுவதும் மட்டுமே இவரது நீண்ட ஆயுளுக்கு காரணம் என்று சொல்ல முடியாது. மரபியல், உடல் இயக்கம், சீரான தூக்கம் உள்ளிட்ட பல காரணிகள் நீண்ட ஆயுளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. குளிர்பானங்களை அதிகமாக குடிப்பது உடல்நலத்திற்கு நல்லது என்றும் இதை எடுத்துக்கொள்ள முடியாது. இருப்பினும், 101 வயதிலும் தனக்குப் பிடித்த உணவுகளை சாப்பிட்டு, ஒழுங்கான வாழ்க்கை முறையை கடைபிடித்து வரும் இந்த சீன தாத்தாவின் வாழ்க்கை இணையத்தில் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.