43 சவரன் நகைகளை குப்பை தொட்டியில் போட்ட இளம்பெண்: விசாரணையில் வெளியான தகவலால் அதிர்ச்சியில் உறைந்த போலீசார்..!

43 சவரன் நகைகளை குப்பை தொட்டியில் போட்ட இளம்பெண்: விசாரணையில் வெளியான தகவலால் அதிர்ச்சியில் உறைந்த போலீசார்..!


young woman who put 43 savaran jewelry in the dust bin

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் பகுதியில் முருகன் கோவில் சாலையில் தனியார் வங்கி மற்றும் ஏ.டி.எம் மையம் உள்ளது. இந்த வங்கியில் செக்கியூரிட்டி வேலை செய்து வருபவர் கோதண்டம். இவர் நேற்று காலை ஏ.டி.எம் மையத்திற்குள் சென்று பார்த்த போது, அங்கு வைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டியில் கைப்பை ஒன்று இருந்துள்ளது.

அந்த பையை பிரித்து பார்த்தபோது, அதில் நகைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வங்கி மேலாளர் குன்றத்தூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்தூர் காவல் துறையினர் நகை இருந்த பையை மீட்டு ஏ.டி.எம் மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதில் 30 வயதுடைய பெண் ஒருவர் ஏ.டி.எம் மையத்திற்குள் சென்று கதவை திறந்து குப்பை தொட்டியில் நகை வைத்திருந்த பையினை போட்டு விட்டு செல்வது பதிவாகி இருந்தது. அந்த பெண் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், குன்றத்தூரில் 30 வயதுடைய தனது மகளை காணவில்லை என அவரது பெற்றோர் வாய்மொழியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்ததும், பின்னர் அவர் வீட்டிற்க்கு வந்து விட்டதாக கூறியதும் தெரியவந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், சி.சி.டி.வி காட்சிகளை அந்த பெண்ணின் பெற்றோரிடம் காண்பித்தபோது அந்த காட்சியில் இருப்பது தங்களது மகள்தான் என தெரிவித்தனர். அப்போதுதான் தங்களது மகள் 43 சவரன் நகைகளை குப்பை தொட்டியில் போட்டுவிட்டு சென்றது அவரது பெற்றோருக்கு தெரிய வந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதன் பின்னர், அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் வங்கி ஊழியர்களை அழைத்த குன்றத்தூர் காவல்துறையினர்,  நகைகளை அவர்களிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அந்த பெண் சற்று மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், தூக்கத்தில் எழுந்து நடந்து வரும்போது வீட்டில் இருந்த நகையை பையில் போட்டு எடுத்து வந்து குப்பை தொட்டியில் போட்டுவிட்டு சென்றதும் தெரியவந்தது.