இப்படி ஒரு சோகம் எந்த குடும்பத்துக்கும் வரக்கூடாது!! ரயிலில் சென்ற மனைவி பலி.. கைக்குழந்தையுடன் தவித்த தொழிலாளி..
இப்படி ஒரு சோகம் எந்த குடும்பத்துக்கும் வரக்கூடாது!! ரயிலில் சென்ற மனைவி பலி.. கைக்குழந்தையுடன் தவித்த தொழிலாளி..

சொந்த ஊருக்கு சென்றுகொண்டிருந்தபோது வழியில்லையே மனைவி உயிரிழந்தநிலையில் கைக்குழந்தையுடன் தவித்த தொழிலாளியின் நிலை பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேற்குவங்காள மாநிலத்தை சேர்ந்தவர் கிரிட்டிபாஷ் சர்டார். இவரது மனைவி சராபந்தி சர்டார். இந்த தம்பதியினருக்கு கைக்குழந்தை ஒன்று உள்ளது. கிரிட்டிபாஷ் சர்டார் திருப்பூர் அடுத்த ஊத்துக்குளியில் உள்ள தேங்காய் நார் உரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவந்தநிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இழந்துள்ளார். இதனால் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்ட அவர் வீட்டை காலி செய்துவிட்டு நேற்று மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் திருப்பூரில் இருந்து புறப்பட்டுள்ளார்.
அவர்கள் சென்ற ரயில் சென்னை அருகே சென்றுகொண்டிருந்தபோது கிரிட்டிபாஷ் சார்ட்டரின் மனைவி சராபந்தி திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். ஏற்கனவே காசநோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்ததால் கிரிட்டிபாஷ் பதற்றமடைந்துள்ளார்.
உடனே இதுகுறித்து அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அரக்கோணம் ரெயில்வே மருத்துவமனைக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரயில் அரக்கோணத்தை அடைந்ததும் சராபந்தி ரயிலில் இருந்து கீழே இரக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டுள்ளார்.
அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனை கேட்டு தனது கைக்குழந்தையுடன் கிரிட்டிபாஷ் கதறி அழுதுள்ளார். மேலும் மனைவியின் உடலை அருகிலையே வைத்துக்கொண்டு கைக்குழந்தையுடன் என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்திருந்த அவரின் நிலை அங்கிருந்தவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கிரிட்டிபாஷ்க்கு உதவுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.