அச்சோ பாவம்... கழிவறையில் டெலிவரி... மருத்துவ நிர்வாகிகளின் அலட்சியத்தால் சிசு பரிதாப பலி.!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு இருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு கழிவறையில் டெலிவரி ஆனதால் கழிப்பறை தொட்டியில் குழந்தை விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது மனைவி முத்தமிழ் . நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவரை பிரசவத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் தலைமை மருத்துவமனையில் அனுமதித்திருந்தார். இந்நிலையில் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த முத்தமிழ் கழிவறைக்கு சென்று இருக்கிறார்.
அங்கேயே அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. பிறந்த குழந்தை கழிவறை தொட்டியில் விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த முத்தமிழ் செவிலியர்களை கூப்பிட்டுள்ளார். ஆனால் செவிலியர்கள் யாரும் வரவில்லை. தாமதமாக வந்து குழந்தையை மீட்டிருக்கின்றனர். மேலும் மருத்துவமனையில் குழந்தை நல நிபுணர்கள் இல்லாததால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி உள்ளனர்.
செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்புவதற்கும் 108 ஆம்புலன்ஸ் தாமதமாகவே வந்திருக்கிறது. இதனால் குழந்தை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனைத் தொடர்ந்து முத்தமிழின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் மருத்துவர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். அங்கு வந்த காவல்துறையினர் இரு தரப்பையும் சமரசம் செய்தனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் கடும் பரபரப்பு ஏற்பட்டது.