தமிழகம்

குடி போதையில் கொடுமைப்படுத்திய கணவன்: மனைவி செய்த காரியத்தால் அல்லோகலப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்..!

Summary:

குடி போதையில் கொடுமைப்படுத்திய கணவன்: மனைவி செய்த காரியத்தால் அல்லோகலப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்..!

குடி போதையில் மனைவியை அடித்து சித்திரவதை செய்த கணவன் முகத்தில் கொதிக்கும் ரசத்தை மனைவி ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

விழுப்புரம் மாவட்டம், ஜெயங்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர்கள் நடராஜன்-குப்பம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். குடிபோதைக்கு அடிமையான நடராஜன் தினமும் மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இது குறித்து குப்பம்மாள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரி நடராஜனை அழைத்து எச்சரித்ததுடன், குப்பம்மாளை சமாதானம் செய்து அனுப்பிவைத்துள்ளார். இருப்பினும் நடராஜன் குடி போதையில் தொடர்ந்து, மனைவியை சித்தரவதை செய்து வந்துள்ளார். நேற்று இரவும் வழக்கம்போல் நடராஜன் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த மனைவி அடுப்பில் கொதித்துக்  கொண்டிருந்த ரசத்தை எடுத்து கணவன் முகத்தில் ஊற்றியுள்ளார்.

பிறகு வெந்த முகத்தோடு மனைவி மீது புகார் கொடுக்க நடராஜன் காவல்நிலையம் சென்றுள்ளார். அவருடைய முகத்தை கண்ட் காவல்துறை அதிகாரிகள் நடராஜனை முதலில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அவர் ஆம்புலன்ஸில் செல்ல மறுத்து ரகளையில் ஈடுபட்டார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை வலுக்கட்டாயமாக ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து செஞ்சி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடித்து கொடுமைப் படுத்தி வந்த கணவன் மீது கொதிக்கும் ரசத்தை மனைவி ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement