மக்களே... ஜூலை 1 முதல் 125 நாள் வேலை திட்டம் அமல்..! மத்திய அரசு வெளியிட்ட புதிய திட்டத்தின் ரூல்ஸ் இதுதான்..!!!
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய ஆதாரமாக இருந்து வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு மாற்றாக, மத்திய அரசு புதிய வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வரும் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ள இந்த திட்டத்தின் கீழ், கிராமப்புற மக்களுக்கான வேலை நாட்கள் 100-இலிருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'விக்சித் பாரத் - ரோஜ்கார் மற்றும் ஆஜீவிகா மிஷன் உத்தரவாதம்' என்ற பெயரில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டம், கிராமப்புறங்களில் நிலையான வேலைவாய்ப்புகளையும் உள்கட்டமைப்பு மேம்பாட்டையும் நோக்கமாகக் கொண்டதாக கூறப்படுகிறது. கூடுதலாக வழங்கப்படும் 25 வேலை நாட்கள், வாழ்வாதாரத்திற்காக நகரங்களுக்கு இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கையைக் குறைக்க உதவும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ரூ.95,692 கோடி இடைக்கால நிதி ஒதுக்கீடு
திட்டத்தின் தொடக்க கட்ட செயல்பாடுகளுக்காக மத்திய அரசு ரூ.95,692 கோடி இடைக்கால நிதியை ஒதுக்கியுள்ளது. புதிய 'கிராமின் ரோஜ்கார் உத்தரவாத அட்டைகள்' வழங்கப்படும் வரை, தற்போது பயன்பாட்டில் உள்ள e-KYC சரிபார்க்கப்பட்ட வேலை அட்டைகளே செல்லுபடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொழிலாளர்களின் ஊதியம் வாராந்திர அல்லது இரு வாரங்களுக்கு ஒருமுறை DBT முறையில் நேரடியாக வங்கி அல்லது அஞ்சலகக் கணக்குகளுக்கு அனுப்பப்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திட்ட அமல்பாட்டை கண்காணிக்க 100-க்கும் மேற்பட்ட மண்டல அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டிஜிட்டல் கண்காணிப்புக்கு முக்கியத்துவம்
முறைகேடுகளைத் தடுக்க புதிய தொழில்நுட்ப வசதிகளும் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, போலி வருகைப்பதிவைத் தவிர்க்க முகம் கண்டறியும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை கட்டாயமாக்கப்படுகிறது. அதேபோல், ஆதார் அடிப்படையிலான முழுமையான பயனாளர் சரிபார்ப்பு மற்றும் பணித் தரத்தை மதிப்பிடும் டிஜிட்டல் செயலிகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
கிராமப்புறச் சாலைகள், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள், வேளாண் சார்ந்த உள்கட்டமைப்புகள் உள்ளிட்ட நீண்டகால பயன்பாட்டுத் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன், பெண்களின் பங்கேற்பை அதிகரிக்கவும் தனிப்பட்ட வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு
இந்நிலையில், புதிய 125 நாள் வேலைத் திட்டம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ஏற்கனவே 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் சட்டப்படி வழங்கப்பட வேண்டிய வேலை நாட்களே முழுமையாக கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், திட்டச் செலவில் 40 சதவீதத்தை மாநில அரசுகள் ஏற்க வேண்டும் என்ற நிபந்தனை, நிதி நெருக்கடியில் உள்ள மாநிலங்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கிராமப்புறப் பெண்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவாக இருந்த திட்டத்தை மாற்றுவது ஏமாற்றமளிப்பதாகவும் அவர் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: டெல்லியில் மக்களுக்கு தவெக அரசு செய்த தரமான சம்பவம்! பிரதமர் மோடியிடம் கொடுத்த 'மெகா டிமாண்ட்' லிஸ்ட் இதோ.... அதிர்ந்து போன அரசியல் களம்..!!