உள்ளாட்சி அமைப்புகளின் வருவாய் அதிகரிக்க தமிழக அரசு அதிரடி; சொத்து வரி 100 சதவீதம் உயர்வு

தமிழகம் முழுவதும் அணைத்து மாவட்டங்களிலும் சொத்து வரி 50 முதல் 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இடத்திற்கேற்ப சொத்து வரி விதிக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படுகிறது. முறைப்படி 2008க்கு பின் சொத்து வரி ஏற்றப்படவில்லை. சில உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி அவ்வப்போது உயர்த்தப்பட்டது. பல பகுதிகளில் சொத்து வரி வசூலிக்கப்படாமல் உள்ளது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி, சொத்து வரியை மாற்றி அமைப்பது குறித்து முடிவெடுத்து இரண்டு வாரத்தில் பதில் அளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி குடியிருப்பு பகுதி, வாடகை குடியிருப்பு பகுதி, குடியிருப்பு அல்லாத பகுதி என மூன்று விதமாக சொத்து வரி விதிக்கப்பட உள்ளது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு சொத்து வரி 50 சதவீதம்; வாடகை குடியிருப்பு கட்டடங்களுக்கு 100 சதவீதம்; குடியிருப்புஅல்லாத கட்டடங்களுக்கு 100 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.
நகராட்சி, பேரூராட்சி பகுதிகள் 'ஏ, பி, சி' என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு, சதுர அடி முறையில் தனித்தனியே சொத்து வரி விதிக்கப்பட்டு உள்ளது.அவை அனைத்தும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. புதிய சொத்து வரி நடப்பு ஆண்டு முதல் வசூலிக்கப்படும்.
வரி உயர்வுக்கு தி.மு.க., எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சி எம்.எல்.ஏ., சுப்பிரமணியன் அறிக்கை: உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்க வேண்டிய 3,500 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட நிதி இன்னமும் பெறப்படாமல் உள்ளது.