காட்டுகுடிசையில் ஸ்கேன்.., பெண் சிசுக்கள் கொலை.. திடுக்கிடும் தகவல்.. தமிழகத்தையே அதிரவைக்கும் சம்பவம்.!

காட்டுகுடிசையில் ஸ்கேன்.., பெண் சிசுக்கள் கொலை.. திடுக்கிடும் தகவல்.. தமிழகத்தையே அதிரவைக்கும் சம்பவம்.!


Tirupattur Fake Doctor Identify Pregnant Woman Baby Gender and done Illegal Abortion

கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா? என கூறி, பெண்ணாக இருந்தால் கருவிலேயே குழந்தையை அழிக்கும் கும்பல் திருப்பத்தூரில் சிக்கியுள்ளது. புரோக்கர்கள் நியமித்து, பலே திட்டத்துடன் நடந்த பரபரப்பு சம்பவத்தில், ஏற்கனவே இதே வழக்கில் கைதான கயவன் 5 ஆவது முறையாக சிக்கியுள்ளான். 

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சாமி நகரில் வசித்து வருபவர் சுகுமார் (வயது 55). இவர் கர்ப்பிணிகள் வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினம் குறித்து ஸ்கேன் செய்து பணம் சம்பாதித்துள்ளார். இது சட்டவிரோத செயல் என்று தெரிந்தும் அதனை செய்து வந்த நிலையில், நேற்று சுகாதாரத்துறை அதிகாரிகள் சுகுமாரை அதிரடியாக மடக்கிப்பிடித்தனர். 

இவர் கருவில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என்ற சோதனை செய்துவந்தது மட்டுமல்லாது, கருவிலேயே பெண் குழந்தைகளை அழிக்கும் செயலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் வாயிலாக இலட்சக்கணக்கில் சொத்துக்கள் வாங்கப்பட்ட நிலையில், பி.எஸ்.சி படித்துள்ள சுகுமார், ஸ்கேன் பற்றி டிப்ளோமா பயின்றுள்ளார். 

கடந்த 20 வருடத்திற்கு முன்னதாக திருப்பத்தூர் மீனாட்சி திரையரங்கம் எதிரே ஸ்கேன் சென்டரை திறந்தவர், போதுமான வருமானம் இல்லை என நினைத்து தனியார் மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணி பெண்களிடம் பேச்சுக்கொடுத்து, கருவில் உள்ள குழந்தைகளை ஆணா? பெண்ணா? என பார்த்து கூறுவதாகவும் தெரிவித்துள்ளார். 

Tirupattur

இதற்காக அதிகளவில் கட்டணம் பெற்றுக்கொண்ட நிலையில், பெண் குழந்தையாக இருந்தால் அதனை அழிக்கும் செயலிலும் ஈடுபட்டு இருக்கிறார். தன்னால் வீடு வாடகைக்கு எடுத்து ஸ்கேன் சென்டரும் திறந்த நிலையில், இந்த தகவல் தெரியவந்ததும் சுகாதாரத்துறையினர் சுகுமாரை அதிரடியாக பிடித்துளள்னர். மேலும், அவரின் ஸ்கேன் சென்டருக்கு சீல்வைத்து, காவல் நிலையத்தில் புகார் அளித்து சிறையில் அடைத்துள்ளனர். 

சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வரும் சுகுமார் தொடர் அதே செயலில் களமிறங்க, தற்போது வரை 4 முறை கைது செய்யப்பட்டுள்ளார். 4 ஆவது முறையாக ஜாமினில் வெளியான சுகுமார், தொழிலை மேலும் விரிவுபடுத்த முடிவெடுத்து இருக்கிறார். இதனையடுத்து, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர், இராணிப்பேட்டை மாவட்டத்தில் புரோக்கரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களின் மூலமாக கர்ப்பிணி பெண்களை திருப்பத்தூருக்கு வரவழைத்து தொழிலை விரிவு படுத்தியுள்ளார். திருப்பத்தூரில் உள்ள பல மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களும் சுகுமாருடன் தொடர்பில் இருந்துள்ளனர். இவர்கள் கமிஷன் தொகையை பெற்றுக்கொண்டு சுகுமாரின் ஸ்கேன் மையத்திற்கு கர்ப்பிணிகளை அனுப்பி வைத்துள்ளனர். 

Tirupattur

மேலும், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் வராமல் இருக்க வேண்டும் என்பதற்காக சுகுமார் கதிரம்பட்டி காட்டுப்பகுதியில் குடிசை அமைத்து ஸ்கேன் இயந்திரங்களை வைத்துள்ளார். அங்கு கர்ப்பிணிகளின் குழந்தைகள் பாலினம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த விஷயத்திற்கு மிரண்டா, பேண்டா என ரகசிய வார்த்தையையும் பயன்படுத்தி இருக்கின்றனர்.

அதாவது, மிரண்டா என்றால் ஆண் குழந்தை எனவும், பேண்டா என்றால் பெண் குழந்தை என்றும் அர்த்தமாம். பெண் குழந்தையாக இருந்தால் கருவில் உள்ள குழந்தையை அழிக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி கொடூரம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இவருக்கு உதவியாக வேடியப்பன் என்பவரும் பணியில் இருந்துள்ளார். இதற்காக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் என நபருக்கு கட்டணம் வசூல் செய்யப்பட்டு, நாளொன்றுக்கு ரூ.2 இலட்சம் வரை வருமானம் பார்த்துள்ளனர். 

வெளிமாவட்ட கர்ப்பிணி பெண்கள் வந்தால், அவர்கள் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் இறங்கி சுகுமார் கூறும் ஆட்டோவில் ஏறி ஸ்கேன் சென்டருக்கு வந்துள்ளனர். மேலும், ஆட்டோவில் ஏறியதும் செல்போன் சுவிட்ச் ஆப் செய்து வைத்துவிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ரகசிய சம்பவம் தொடர்பான தகவல் சுகாதாரத்துறையினருக்கு தெரியவந்துள்ளது. 

Tirupattur

இதனையடுத்து, சென்னை சுகாதாரத்துறை கண்காணிப்பு குழு கமலக்கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் பெண்ணை ஏற்பாடு செய்து, குழந்தையின் பாலினத்தை கண்டறிய வேண்டும் என சுகுமாரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அவர்கள் கூறியவாறு திருப்பத்தூர் பேருந்து நிலையத்திற்கு பெண் என்ற நிலையில், அதிகாரிகள் மறைவாக இருந்து அனைத்தையும் கண்காணித்து இருக்கின்றனர். 

ஆட்டோ வழக்கம்போல தோட்டத்திற்கு செல்ல, ஸ்கேன் செய்ய 10 க்கும் மேற்பட்ட பெண்கள் இருந்துள்ளனர். இதனையடுத்து, களத்தில் இறங்கிய அதிகாரிகள் சுகுமார் மற்றும் வேடியப்பனை அதிரடியாக மடக்கிப்பிடித்தனர். அவர்களிடம் இருந்து ஸ்கேன் செய்யும் கருவி மற்றும் ரூ.75 ஆயிரம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. கர்ப்பிணி பெண்களுக்கு அறிவுரை கூறிய அதிகாரிகள் அங்கிருந்து பத்திரமாக அனுப்பி வைத்தனர். 

முக்கிய குற்றவாளிகளான சுகுமார், வேடியப்பனை திருப்பத்தூர் காவல் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைக்கவே, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். இதில், சுகுமார் போலி மருத்துவர் என்பதும் உறுதியான நிலையில், அவருக்கு ஒரு மகன், மகள் பிள்ளைகளாக உள்ளனர். இவர்கள் இருவருமே மருத்துவர்கள் ஆவார்கள்.