அந்த மனசு எல்லோருக்கும் வராது!! அவருதான் சார் கடவுள்!! ஆதரவற்றவர்களின் பசியைப் போக்க பழக்கடைக்காரர் செய்த காரியம்!!

ஏழைகளின் பசியை போக்க பழக்கடைக்காரர் ஒருவர் செய்துள்ள காரியம் பாராட்டுகளை பெற்றுவருகிறது.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் வரும் மே 24 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தற்போது மேலும் ஒரு வார காலத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்காக மாற்றப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு காலத்தில் ஆதரவற்றோர், சாலை ஓரம் வசிப்போர் என பலதரப்பட்ட மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பலருக்கு ஒருவேளை சாப்பாடு கிடைப்பதே பெரிய விஷயமாக உள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், சாப்பாட்டிற்கு இல்லாதவர்கள், ஆதரவற்றவர்களின் பசியைப் போக்குவதற்காக வாழைத் தார்களை தனது கடை முன் கட்டி தொங்கவிட்டுள்ளார் பழ வியாபாரி முத்துப்பாண்டி.
தினமும் 5 வாழைப்பழ தார்களை கட்டி தொங்கவிட்டு, "பசி எடுத்தால் எடுத்து சாப்பிடவும்" என எழுதி அங்கு ஒரு பலகையும் வைத்துள்ளார் முத்துப்பாண்டி. முத்துபாண்டியின் இந்த உதவியால், அவ்வழியாக செல்பவர்கள், சாலையோரங்களில் வசிப்பவர்கள், அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் என ஏராளமானோர் வாழை பழங்களை சாப்பிட்டு விட்டு அவருக்கு நன்றி கூறி செல்கின்றனர்.