14 வயது சிறுவனுக்கு மூக்கில் சதை இருக்குன்னு சொன்ன மருத்துவர்கள்! சுவாசக் குழாய்கு பதில்... உணவு குழாயில் டியூப்! 60 நாட்கள் கோமா போராட்டம்… இறுதியில் நடந்த அதிர்ச்சி!!!



theni-nivas-kumar-death-medical-negligence-allegation

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 14 வயது சிறுவன் நிவாஸ் குமார், 60 நாட்களுக்கும் மேலாக கோமா நிலையில் இருந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். சிகிச்சையின்போது ஏற்பட்டதாகக் கூறப்படும் தவறால் சிறுவனின் உடல்நிலை மோசமடைந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையிடம் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சையின்போது ஏற்பட்டதாக கூறப்படும் தவறு

தேனி மாவட்டம் சருத்துப்பட்டியைச் சேர்ந்த சுதாவின் 14 வயது மகன் நிவாஸ் குமார், கடுமையான சளி மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஜூன் 2-ஆம் தேதி பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் மூக்கில் சதை வளர்ச்சி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: காரித்துப்பிய நபர்.. ஆத்திரத்தில் வீசிய குண்டு.. கடலூரில் ஓட்டுநர் கொலை.. பதறவைக்கும் தகவல்.! 

இதையடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டபோது, சுவாசக் குழாயில் செலுத்த வேண்டிய டியூப் தவறுதலாக உணவுக் குழாயில் செலுத்தப்பட்டதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் சிறுவனின் உடல்நிலை திடீரென மோசமடைந்து கோமா நிலைக்குச் சென்றதாக கூறப்படுகிறது. மருத்துவ அலட்சியம் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

60 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை

உடல்நிலை கவலைக்கிடமானதைத் தொடர்ந்து நிவாஸ் குமார் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை சிறுவன் உயிரிழந்தார். அவரது உடலைக் கண்ட தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் சோகமான சூழல் நிலவியது.

காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு

நிவாஸ் குமாரின் பெற்றோருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அதில், சிறுவனின் உடற்கூராய்வை உறவினர்கள் முன்னிலையில் முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும், சிகிச்சையில் தவறு செய்ததாகக் கூறப்படும் மருத்துவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மகனை இழந்து தவிக்கும் ஏழை குடும்பத்திற்கு அரசு உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறுவனின் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு உண்மை நிலை வெளிவர வேண்டும் என்பதே குடும்பத்தினரின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

 

இதையும் படிங்க: BREAKING: மகிழ்ச்சி செய்தி! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு!!!