பறவைக்காய்ச்சல் எச்சரிக்கை: தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு.!



TamilNadu Government Issues Advisory on H5N1 Bird Flu Public Urged Not to Panic, Call 104 for Assistance

சென்னையில் H5N1 பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

பறவைக்காய்ச்சல் உறுதி:

பறவைக்காய்ச்சல் தொடர்பாக பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், வதந்திகளை நம்பாமல் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. சமீபத்தில் தமிழகத்தின் சில மாவட்டங்களிலும், சென்னையின் ஒருசில பகுதிகளிலும் காகங்கள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில், காகத்தில் H5N1 வகை பறவைக்காய்ச்சல் வைரஸ் உறுதி செய்யப்பட்டது.

இதையும் படிங்க: Bird Flu: தமிழகத்தில் பறவைக்காய்ச்சல்.. ஆப்-பாயில் சாப்பிடாதீங்க.. தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

கிருமிநாசினி:

H5N1 வைரஸ் மிக வேகமாகப் பரவக்கூடிய தன்மை கொண்டதால், கோழிகள் மற்றும் வீட்டுப் பறவைகளுக்கு தொற்று ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வைரஸ் மனிதர்களுக்கும் பரவும் வாய்ப்பு இருப்பதால், சுகாதாரத் துறை கண்காணிப்பை வலுப்படுத்தியுள்ளது. பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

tamilnadu government

மனிதர்களுக்கு பரவவில்லை:

இந்த நிலைமையை முன்னிட்டு, சென்னை தலைமைச் செயலகத்தில் பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை அதிகாரிகள் வைரஸ் பரவும் முறை மற்றும் தற்போதைய நிலை குறித்து விளக்கமளித்தனர். தமிழ்நாட்டில் இதுவரை மனிதர்களுக்கு பறவைக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

சமைத்து பயன்படுத்த அறிவுறுத்தல்:

மாவட்ட அளவில் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த கடந்த 6ஆம் தேதி மாவட்ட சுகாதார அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதாகவும், பல்வேறு துறைகளுடன் இணைந்து செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. மனிதர்களுக்கு தொற்று பரவாமல் இருக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து துறைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை நன்றாகச் சமைத்து மட்டுமே பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

tamilnadu government

விழிப்புணர்வு அவசியம்:

பொதுமக்கள் கவலைப்படத் தேவையில்லை என்றாலும், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. காகம் அல்லது பிற பறவைகள் இறந்த நிலையில் காணப்பட்டால் உடனடியாக கால்நடைத் துறை அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அருகிலுள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுக வேண்டும். பறவைக் காய்ச்சல் குறித்த சந்தேகங்களுக்கு 104 என்ற தொலைபேசி எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

இதையும் படிங்க: பறவைக் காய்ச்சல் எதிரொலி: முட்டை, சிக்கன் சாப்பிடலாமா?