பறவைக் காய்ச்சல் எதிரொலி: முட்டை, சிக்கன் சாப்பிடலாமா?
முட்டை, சிக்கன் போன்றவை சாப்பிட்டால் மனிதர்களுக்கு பறவைக்காய்ச்சல் தொற்று ஏற்படுமா? என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
H5N1 பறவைக்காய்ச்சல்:
தமிழகத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ள பறவைக் காய்ச்சல் காரணமாக முட்டை மற்றும் சிக்கன் போன்ற அன்றாட உணவுகள் மூலம் வைரஸ் பரவும் அபாயம் குறித்து மக்களிடையே சந்தேகங்கள் எழுந்துள்ளன. கடந்த சில வாரங்களில் சென்னை அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் பல காகங்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, அதன் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்தபோது H5N1 பறவைக் காய்ச்சல் வைரஸ் இருப்பது உறுதியாக கண்டுபிடிக்கப்பட்டது.
இதையும் படிங்க: 'மழைநீரில் வெறும் காலில் நடக்காதீங்க'.. வைரஸ் அபாயம்.. தமிழக சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை.!
முட்டை, சிக்கனால் பரவுமா?
இதனால் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறை, பறவைக் காய்ச்சல் பரவலை தடுக்கும் விதிகளில் பல கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. இவ்வகை காய்ச்சல் H5N1 மற்றும் பிற இன்ஃப்ளூயன்ஸா A வகை வைரஸ்களால் ஏற்படும். இது பொதுவாக பாதிக்கப்பட்ட பறவைகளின் சளி, உமிழ்நீர் மற்றும் கழிவுகளுடன் நேரடியாக தொடர்பு கொண்டால் பரவும். பறவைகளுடன் நீண்ட நேரம் தொடர்பில் இருப்பவர்கள், பண்ணை தொழிலாளர்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், உணவுப் பொருட்களான சிக்கன் மற்றும் முட்டை மூலம் பரவும் வாய்ப்புகள் குறைவு ஆகும்.

தடுப்பு நடவடிக்கை என்ன?
சிக்கன் இறைச்சியில் வைரஸ் இருப்பின், அதை குறைந்தபட்சம் 74°C வெப்பநிலையில் சமைத்தால் வைரஸ் அழிந்துவிடும். முட்டைகளிலும், பாதிக்கப்பட்ட கோழிகளின் முட்டை ஓடுகளில் குறைந்த அளவில் வைரஸ் இருக்கக்கூடும் என்பதால், விற்பனைக்கு செல்லும் முட்டைகளை சுத்தமாக கழுவி அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் பேஸ்டரைசேஷன் சோதனை செய்ய வேண்டும். முட்டையின் மஞ்சளை நன்கு வேகவைத்தால் எந்த உயிருள்ள வைரஸ்களும் உயிர்வாழாது. அதே நேரத்தில், பச்சை கோழி மற்றும் லேசாக வேகவைத்த முட்டைகளை சாப்பிட கூடாது. இதனால் வைரஸ் பரவும் அபாயம் உண்டு.
இதையும் படிங்க: முட்டைகளில் புற்றுநோய் ஆபத்து..? தமிழக மக்களுக்கு அதிகாரிகளின் முக்கிய அறிவிப்பு.!!!