'மழைநீரில் வெறும் காலில் நடக்காதீங்க'.. வைரஸ் அபாயம்.. தமிழக சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை.!
Tamilnadu Health Alert: தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், தேங்கியுள்ள நீரில் எலிக்காய்ச்சல் மற்றும் மிலியாயடோசிஸ் தொற்று பரவலாம் என தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நோய் பரவும்:
மழை பெய்து சாலைகளில் தேங்கி இருக்கும் நீரில் வெறும் காலில் நடப்பதை தவிர்க்க வேண்டும். குட்டைகளில் தேங்கி இருக்கும் நீரில் எலிக்காய்ச்சலை பரப்பும் லெப் டோஸ்பைரா பாக்டீரியா இருக்கலாம். இதன் தொற்றுகள் விலங்குகளுக்கு பரவி, பின் அதன் வாயிலாக மனிதர்களுக்கு பரவும் வாய்ப்புகள் உள்ளன. எலிக்காய்ச்சல் நுரையீரல், சிறுநீரகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். நாய், பன்றி, கால்நடையின் சிறுநீர் மூலமாகவும் இவ்வகை பாதிப்பு ஏற்படும்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு வைரஸ் பரவல்.. வைரஸின் அறிகுறிகள் என்ன?.. எதிர்கொள்வது எப்படி?.!
தேங்கிய நீர்:
மழைக்குப்பின் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ள இவ்வகை நோய்த்தொற்றுகளில் இருந்து நாம் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மழைக்குப்பின் சுமார் ஒரு லட்சம் பேர் இவ்வகை பாதிப்பால் உடல்நலக்குறைவை எதிர்கொள்கின்றனர். இந்த வைரஸ் தொற்றை தவிர்க்க தேங்கியுள்ள மழை நீரில் கால் வைத்து நடப்பதை தவிர்க்க வேண்டும். மிலியாயடோசிஸ் பாக்டீரியா மழைக்காலத்தில் பரவும். இது மண்ணுக்குள் இருக்கும் நுண்ணுயிரி மூலம் ஏற்படும். மாசடைந்த நீரில் நடப்பது, மாசுபட்ட நீரை குடிப்பது நோய்த்தொற்றை ஏற்படுத்தும்.
நோய் அறிகுறிகள்:
இவ்வகை நோயினால் ஏற்படும் பாதிப்பு மனிதருக்கு பரவிய 2 வாரங்கள் கழித்தே அறிகுறிகளாக தென்படும். தீவிரமான காய்ச்சல், குளிர் நடுக்கம், தலைவலி, இருமல், மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும். உரிய சிகிச்சை எடுக்காத பட்சத்தில் கல்லீரல், சிறுநீரகம், எலும்பு, மூளை போன்ற உடலின் முக்கிய உறுப்புக்கள் பாதிக்கப்படும். நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், நுரையீரல் பாதிப்பு இருப்போர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கவனமாக இருப்பது நல்லது. சந்தேகம் இருப்பின் மருத்துவரை அணுகலாம்.