அனைத்து ரேஷனிலும்.. தமிழ்நாடு முழுவதும் பறந்தது உத்தரவு.!



Tamil Nadu Orders Mandatory Internet Connectivity for All Ration Shops; 369 Outlets Identified Without Access

இணைய வசதி இல்லாத ரேஷன் கடைகளை கண்டறிந்து, தமிழ்நாடு ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் மூலம் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இணையவசதி அவசியம்:

தமிழ்நாட்டில் இணைய வசதி இல்லாமல் செயல்பட்டு வந்த ரேஷன் கடைகளுக்கு கட்டாயமாக இணைய இணைப்பு வழங்க உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநிலம் முழுவதும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் “தாயுமானவர்” திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், திட்டம் தடையின்றி செயல்பட இணைய வசதி அவசியம் என துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மக்களே வெளியே வராதீங்க! இன்னும் சற்றுநேரத்தில்.. இந்த 28 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை! வானிலை மையம் அறிவிப்பு!

மேம்படுத்த நடவடிக்கை:

சரியான இணையவசதி இல்லாத காரணத்தால், ரேஷன் கடை பணியாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக கூறப்பட்டுள்ளது. 50 வயதுக்கு மேற்பட்ட பெண் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல்நலக்குறைவு கொண்ட ஊழியர்களுக்கு தாயுமானவர் திட்ட விநியோகப் பணிகளில் இருந்து விலக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மேலும், திட்டம் செயல்படும் நாட்களில் ‘புளூடூத்’ முறையை ரத்து செய்து, விற்பனை முனைய கருவி (POS) இயக்கம் சீராக நடைபெற ‘ஹாட் ஸ்பாட்’ சார்ந்த சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும் என்றும், ‘ஓயசீஸ்’ நிறுவனத்தின் தரவுத் தளத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை மனு முதலமைச்சரிடம் அளிக்கப்பட்டது.

ration shop

சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது:

இதனைத் தொடர்ந்து, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குநர் சஜானா, இணைய வசதி இல்லாத ரேஷன் கடைகளுக்கு உடனடி இணைப்பு வழங்க நிதி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், சிவகாசி, சேலம், தேனி, திருச்சி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, திருப்பத்தூர், வேலூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களுக்கு அவசர சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதிரடி உத்தரவு:

தமிழகம் முழுவதும் இயங்கி வரும் 34,877 ரேஷன் கடைகளில் 369 கடைகளில் இணைய இணைப்பு இல்லாதது கண்டறியப்பட்டுள்ளது. இக்கடைகளுக்கு தமிழ்நாடு ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் நிறுவனம் மூலம் இணைய வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 28 ரேஷன் கடைகளில் இணைய இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது. தங்களது மாவட்டங்களில் இணைய இணைப்பு இல்லாத அனைத்து ரேஷன் கடைகளிலும் விரைவாக இணைப்பு வழங்கப்படுவதை உறுதிசெய்து, சேவை தொடங்கியதும் உடனடியாக இயக்குநர் அலுவலகத்துக்கு தகவல் அளிக்க மாவட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் தொழில்நுட்ப தடை இல்லாமல், பொதுமக்களுக்கு தடையற்ற சேவை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துறை விளக்கம் அளித்துள்ளது. இதனால் மக்கள் ரேஷனில் காத்திருப்பு நேரமும் மிச்சமாகும்.

இதையும் படிங்க: மக்கள் கவனத்திற்கு.... தமிழகத்தில் 28 மாவட்டங்களில் இரவு முழுவதும் பெய்ய போகும் பேய் மழை!