16 நாட்கள் ஆகிட்டு... செஞ்சி 7 வயது சிறுமி வழக்கில் பெங்களூருக்கு பறக்கும் சிபிசிஐடி அதிகாரிகள்! இப்போ வேற ரூட்டில் விசாரணை.... அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி..!!!!



hemalatha-missing-girl-case-cbcid-probe

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மாயமான 7 வயது சிறுமி ஹேமலதாவைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 16 நாட்களைக் கடந்தும் சிறுமி குறித்த உறுதியான தகவல் கிடைக்காததால், வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் விசாரணை நடத்தி வந்த அதிகாரிகள் தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர்.

குடும்பத்தினர் உள்ளிட்டோரிடம் சிபிசிஐடி விசாரணை

செஞ்சி அருகே ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் மகள் ஹேமலதா, அக்டோபர் 11ஆம் தேதி இரவு பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குப் பிறகு வீட்டில் தூங்கியுள்ளார். மறுநாள் அதிகாலையில் படுக்கையறையில் சிறுமியைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சிறுமியைத் தேடிய நிலையில், போலீசாரும் விசாரணையைத் தொடங்கினர்.

இதையும் படிங்க: பிறந்தநாள் கேக்கில் இருக்கும் மர்மம்... செஞ்சி சிறுமி வழக்கில் சிக்கிய மாப்பிள்ளை தம்பி...! பல கோணங்களில் பரபரப்பு விசாரணை..!!!

ஆனால், பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஆலம்பூண்டி அரசுப் பள்ளியில் முகாமிட்ட அதிகாரிகள், சிறுமியின் தாய் பவானி, பாட்டி உள்ளிட்டோரிடமும், வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் சிலரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். இருப்பினும், விசாரணையில் இதுவரை உறுதியான துப்பு கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

பெங்களூருவில் உறவினர்களிடம் விசாரணை

இந்நிலையில், சிறுமியின் தந்தை வடிவேலுவின் உறவினர்கள் சிலர் பெங்களூருவில் வசிப்பதால், விசாரணை அங்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. குடும்பத்துக்குள் முன்பு பணப் பிரச்சினை அல்லது முன்விரோதம் இருந்ததா, அதன் காரணமாகச் சிறுமி கடத்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளதா என்பது உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது. 

சிறுமி காணாமல் போன காலகட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள் தமிழகத்துக்கு வந்து சென்றார்களா, உள்ளூரில் யாருடனாவது தொடர்பில் இருந்தார்களா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்காக செல்போன் அழைப்புப் பதிவுகள், நடமாட்டம் உள்ளிட்ட விவரங்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

தொடரும் தேடுதல் பணி 

பெங்களூருவுக்குச் சென்றுள்ள தனிப்படை போலீசார், அங்கு வசிக்கும் தந்தை வழி உறவினர்களிடம் நேரில் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களின் வீடுகள் மற்றும் பணியிடங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், சிறுமி எங்கு இருக்கிறார், அவர் மாயமானதற்கான காரணம் என்ன என்பது இன்னும் தெரியவில்லை.

16 நாட்களைக் கடந்தும் ஹேமலதா குறித்த தகவல் கிடைக்காததால், குடும்பத்தினரும் அப்பகுதி மக்களும் கவலையில் உள்ளனர். விசாரணை பல்வேறு கோணங்களில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சிறுமியைப் பாதுகாப்பாக மீட்டு, அவர் மாயமானதன் பின்னணியை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

இதையும் படிங்க: 7 வயது சிறுமி மாயமான வழக்கில் தீடீர் திருப்பம்! கண்ணீருடன் கதறும் தாய்... ஜோதிடர் சொன்ன அதிர்ச்சி தகவல்...!!!