அம்மா... என்னை மீண்டும் மன்னித்துவிடு.! நீட் தேர்வு தோல்வியால் மாணவி எடுத்த விபரீத முடிவு.!

அம்மா... என்னை மீண்டும் மன்னித்துவிடு.! நீட் தேர்வு தோல்வியால் மாணவி எடுத்த விபரீத முடிவு.!



student died for neet exam

கடந்த சில வருடங்களாக மத்திய அரசு கொண்டு வந்த மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு காரணமாக, தற்கொலைகள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் இதற்கு முதலில் பலியானவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா என்ற மாணவி. அவரை தொடர்ந்து பல்வேறு சமயங்களில் பலர் இந்த தேர்வு பயம் காரணமாக உயிரிழந்தனர்.

இதனையடுத்து இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மாநில அரசு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும், பல்வேறு அரசியல் கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவில் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். 

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பாரதி நகரை சேர்ந்தவர் ஜெயா. 18 வயது நிரம்பிய இவர் கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில்12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மருத்துவர் ஆகவேண்டும் என்ற லட்சியத்துடன் படித்த அவர் ‘நீட்’ தேர்வும் எழுதினார். கடந்த மாதம் நீட் தேர்வு முடிவு வெளியாகியது. இதில் மாணவி ஜெயா 69 மதிப்பெண் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். 

இதன் காரணமாக, மன வருத்தத்துடன் அவர் காணப்பட்டார். இதனை அறிந்து கொண்ட பெற்றோர் அவரை திருப்பூரில் இருக்கின்ற தன்னுடைய சகோதரி வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு சில வாரங்கள் இருந்த ஜெயா, தனது பெற்றோரை பார்த்துவிட்டு வருவதாக கூறிவிட்டு பாரதி நகருக்கு வந்தார். 

இந்த நிலையில் கடந்த 17-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் விஷம் குடித்தார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் மாணவி ஜெயா.

நீட் நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்ததன் காரணமாக, அவர் தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. மேலும், மாணவி ஜெயா எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று கிடைத்தது. அந்த கடிதத்தில் நீட் தேர்வில் வெற்றி பெறாததால் என்னால் நிம்மதியாக வாழ இயலவில்லை, தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தேன். அம்மா.. என்னை மீண்டும் மன்னித்துவிடு என்று குறிப்பிட்டுள்ளார்.