தாயாருக்கு இறுதி சடங்கு செய்ய ஓடோடி வந்த மகன்: வழியில் நடந்த விபத்தில் பலியான பரிதாபம்..!

தாயாருக்கு இறுதி சடங்கு செய்ய ஓடோடி வந்த மகன்: வழியில் நடந்த விபத்தில் பலியான பரிதாபம்..!



Son rushed to perform mother's last rites: Tragedy killed in an accident on the way

கர்நாடக மாநிலம், பெங்களூரு பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன்(62). இவர், பெங்களூரில் டயர் ரீ-டிரேடிங் செய்யும் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி பத்மாவதி (58) இந்த தம்பதியினரின் மகள் மகாலட்சுமி (32). இவரது கணவர் குங்குமராஜ் (41). இவர்களுக்கு அனல்யா(9), சமிட்ஷா(11) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில், பார்த்திபனின் சொந்த ஊரான நெய்வேலியில் வசித்து வந்த அவரது தாயார் இறந்துவிட்டார். இது குறித்து  தகவலறிந்த பார்த்திபன், நேற்று அதிகாலை தனது மனைவி பத்மாவதி , மகள் மகாலட்சுமி, மருமகன் குங்குமராஜ் மற்றும் பேத்திகளுடன் பெங்களூரில் இருந்து நெய்வேலிக்கு காரில் புறப்பட்டு சென்றார்.

காரை, பார்த்திபனின் மருமகன் குங்குமராஜ் ஓட்டினார். கார், சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த மேட்டுப்பட்டி செல்லியம்மன் நகர் துணை மின் நிலையம் அருகே சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த இரும்பு தடுப்புவேலியில் மோதியது. இந்த விபத்தில் கார் ரோட்டோரம் கவிழ்ந்தது.

காரில் இருந்த அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்தனர். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு பார்த்திபன் மற்றும்  அவரது மகள் மகாலட்சுமி ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த சிறுமி அனல்யா, சமிட்ஷா, பார்த்திபன் மனைவி பத்மாவதி, மருமகன் குங்குமராஜ் ஆகியோர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வாழப்பாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.