3 மாத இன்ஸ்டா காதலனை கரம்பிடித்த கல்லூரி மாணவி.. ஸ்டேஷனில் தஞ்சமானதால், கைவிட்டுச்சென்ற இருதரப்பு பெற்றோர்.!

இன்ஸ்டாகிராமில் நட்பு ஏற்பட்டு காதலாக மாறி, 3 மாதத்தில் காதலனை கல்லூரி மாணவி கரம்பிடித்தார். இருதரப்பு பெற்றோரும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் புகுந்தது.
சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நகரை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 24). இவர் பி.காம் படித்து முடித்துவிட்டு, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, சாமிபுரம் காலனியை சேர்ந்தவர் அபிராமி (வயது 20). இவர் பி.எஸ்.சி 2 ஆம் வருடம் பயின்று வருகிறார்.
ஹரிஹரனுக்கும் - அபிராமிக்கும் இடையே கடந்த 3 மாதத்திற்கு முன்னதாக இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டு, நட்பு பின்னாளில் காதலாக மாறியுள்ளதாக தெரியவருகிறது. இதனால் கடந்த 3 மாதமாக இருவரும் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோர்களுக்கும் தெரியவந்துள்ளது.
இவர்களின் காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததால், வீட்டை விட்டு கடந்த 19 ஆம் தேதி வெளியேறிய காதல் ஜோடி, திண்டுக்கல் அருகே உள்ள அம்மன் கோவிலில் வைத்து மாலைமாற்றி தாலிகட்டி திருமணம் செய்துகொண்டுள்ளது. தற்போது, இவர்களின் உயிருக்கு பெற்றோர்களால் ஆபத்து இருப்பதாக காதல் ஜோடி எண்ணியுள்ளது.
இதனையடுத்து, தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கூறி சிவகாசி காவல் நிலையத்தில் காதல் திருமணம் செய்து ஜோடி தஞ்சம் புகுந்துகொள்ள, அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இதற்குள்ளாக, சேலம் புறப்பட்டு சென்ற காதல் ஜோடி, அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்துள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக விசாரணை செய்த காவல் துறையினர், இருதரப்பு பெற்றோரையும் அழைத்து சமாதானம் பேசினர். பெற்றோர்களின் எதிர்ப்பு தொடர்ந்து நிலவியதால், காதல் ஜோடி மேஜர் என்பதை மேற்கோள்கண்பித்து, இருவரையும் ஜோடியாக அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.